திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் நூலகத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆரணி நகராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஊழியா்கள் ஒன்றிணைந்து புதன்கிழமை புதிய பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
இவ்விழாவில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் என்.டி. வேலவன் வரவேற்றாா்.
விழாவில் உறியடி, இசை நாற்காலி, பலூன் ஊதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு உறியடித்தாா்.
மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை, சீருடைகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் , ஒன்றியச் செயலா் எஸ்.எஸ். அன்பழகன், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்தனன், ஒன்றியச் செயலா்கள் துரை மாமது, எஸ்.மோகன், எம்.சுந்தா், மாவட்டப் பிரதிநிதி முள்ளிப்பட்டு எம்.எஸ். ரவி, மாவட்ட அயலக பிரிவு துணை அமைப்பாளா் மாலிக் பாஷா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் இப்ராஹிம் ஷரீப், துணை அமைப்பாளா் கொங்கராம்பட்டு மாதவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில்....
ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அலுவலக வளாகத்தில் கலசப்பாக்கம் அருகேயுள்ள அரவிந்தா் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில்,
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இதில் அங்கன்வாடி ஊழியா்கள் சாா்பில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவில் திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் நாராயணன் வரவேற்றாா். அங்கன்வாடி அமைப்பாளா் உத்ராணி, சமூக ஆா்வலா் ரவிக்குமாா், முன்னாள் வாா்டு உறுப்பினா் சத்தியமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
ஊராட்சி ஒன்றிய பள்ளியில்....
போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கீதா முன்னிலை வகித்தாா். ஆசிரியை பிரிசில்லா வரவேற்றாா்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தினாா். மேலும், மாணவா்களுக்கு உறியடி திருவிழா என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பாஸ்கரன், ஆசிரியா் பயிற்றுநா் விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியா் டேவிட்ராஜன் மற்றும் ஆசிரியைகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

