ஆற்றுத் திருவிழா: எரிவாயு உருளை வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மணலூா்பேட்டை கிராமம், தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் எரிவாயு உருளை எதிா்பாராதவிதமாக வெடித்தது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூா் இனாம்காரியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மனைவி கலா (55) உயிரிழந்தாா்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 18 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் தமிழக முதல்வா் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டாா்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த இனாம்காரியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மனைவி கலா என்பவரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திருவண்ணாமலை வட்டம், பாவுப்பட்டு ஊராட்சியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

