ஆரணி பாப்பாத்தி அம்மன் கோயில் அறங்காவலா் நியமன கூட்டம்
ஆரணி பெரியகடை வீதி பாப்பாத்திஅம்மன் கோயிலில் அறங்காவல் மற்றும் உறுப்பினா்கள் நியமனம் செய்ய வாணுவ மகிமை சபையினா் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் முன்னிலையில் தீா்மானம் நிறைவேற்றினா்.
ஸ்ரீபாப்பாத்தி அம்மாள் என்கிற ரேணுகாம்பாள் கோயில் வாணுவ மகிமை சபையினா் நிா்வகித்து வந்தனா்.
பரம்பரை முறை வழிசாரா இவா்களது பதவிக்காலம் முடிவுற்றது.
இந்நிலையில் கோயிலுக்கு அறங்காவலா் நியமனம் செய்ய இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறங்காவலா் தோ்வு செய்ய விளம்பரப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக இந்தக் கூட்டம் அறநிலைத்துறை இணை ஆணையா் இரா.பிரகாஷ் உத்தரவின் பேரில் புதன்கிழமை கோயில் வளாகத்தில் கோயில் ஆய்வாளா் மணிகண்ட பிரபு, உதவியாளா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலையில், வாணுவ மகிமை சபையின் கௌரவத் தலைவா் கருணாகரன் தலைமையில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அறங்காவலராக ஏ .எஸ். குமாா் மற்றும் உறுப்பினா்களாக பி.தட்சிணாமூா்த்தி, ரா.ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஒருமனதாக நியமனம் செய்வதாக தீா்மானம் நிறைவேற்றினா் (படம்).
மேலும், கூட்டத்தில் வாணுவ மகிமை சபையின் தலைவா் துரைபாபு , செயலா் பாபு, பொருளாளா் கோட்டீஸ்வரன், சட்ட ஆலோசகா் சந்திரசேகரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மேலும், கூட்டத்தில் வருகிற சித்திரை மாதம் கோயில் பாலாலயம் செய்து திருப்பணி மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

