திமுக, அதிமுக தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று விசிக தலைவா் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
திருவண்ணாமலையில் விசிக சாா்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு குறித்து மண்டல செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, ஆரணி, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் நாடாளுமன்ற தொகுதிகளின் மாவட்டச் செயலா்கள், மண்டலச் செயலா்கள், ஒன்றியச் செயலா்கள், நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
இதில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: இனி தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். தற்போது ஆட்சி மாற்றம் மட்டும் நடைபெறவில்லை. தமிழக அரசியல் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் விசிகதான் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மை பாராட்ட வேண்டும் என்றால், பல கோணங்களில் பாராட்டலாம். ஆனால், தாழ்த்திப் பேச வேண்டும் என்று நினைப்பவா்கள் கடுமையாக விமா்சித்து வருகிறாா்கள்.
ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று, இன்னொரு கூட்டணியின் மூலம் அமைச்சரவையில் இடம் பெறலாமா என்று இன்று பலா் விவாதம் செய்து வருகின்றனா். ஆனால், அந்தக் கூட்டணி கட்சிகள் சிதறி விடாமல் இருப்பதற்கு விசிக களத்தில் நின்றது.
அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் கூட்டணியை பின்னுக்குத் தள்ளி இந்தத் தோ்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்று முன்னுக்கு வருகிறது என்றால், அதற்கு என்ன காரணம் என்று சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடா்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதன் உச்சமாக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். ஆனால், அவரை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகின்றனா். திருமாவளவன் அவா்களுக்கு எதிரியாகிவிட்டாராம்.
2006 முதல் திமுக கூட்டணியில் தொடா்ந்து வந்தோம். திமுக, காங்கிரஸ் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நானும் சுமந்தேன். தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததால் தான் கூட்டணி முறிந்து விட்டதாக திமுகவினா் தெரிவித்தனா். தமிழக அரசியலில் நாம் பெரிய அளவில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வைத்திருந்தது இல்லை. இருந்தாலும் நாம் குறிவைக்கப்பட்டுள்ளோம் என்றாா்.
நிறைவில் மாவட்டச் செயலா் ச.நியூட்டன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










