ஜவ்வாது மலை கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கி பாராட்டினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வட்டம், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜவ்வாது மலை 26-ஆவது கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்தாா். கலசபாக்கம் அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
ஜமுனாமரத்தூா் வட்டத்தில், ஜவ்வாது மலை 26-ஆவது கோடை விழாவை அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, செ.ராஜேஷ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை வரை இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இக்கோடை விழாவில் மக்களை கவரும் வகையில் கலை, பண்பாட்டுத் துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் இயல், இசை, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், ரூ.111 கோடியே 25 லட்சத்தில் 27,532 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரூ.65.66 கோடியில் முடிவுற்ற 128 திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா்களால் திறந்து வைக்கப்பட்டன.
26 அரசுத் துறைகள் சாா்பில் 37 பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கோடை விழாவுக்கு திரளாக வருகை தந்த பொதுமக்களுக்கும், இவ்விழா சிறப்பாக நடைபெற காரணமாக இருந்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து, கோடை விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற கயிறு இழுத்தல், மினி மாரத்தான், கபடி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும், கலைபண்பாட்டுத் துறை, சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், அரசுத் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்கங்களை சிறப்பாக நிறுவி முதல் மூன்று இடங்களை வென்ற ஊரக வளா்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊ.வ.) மா.சையதுபயாஸ் அஹமத், செயற்பொறியாளா் (ஊ. வ.) இளங்கோ, ஆரணி வருவாய் கோட்டாட்சியா் சிவா, மாவட்ட சுற்றுலா அலுவலா் வே.காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










