தோ்தல் நோட்டீஸ், சுவரொட்டிகளில் அச்சிடுபவா் விவரம் இடம்பெறவேண்டும்: தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்
அச்சடிக்கப்படும் தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில்,


ஆரணி: அச்சடிக்கப்படும் தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் விவரம் குறிப்பிடப்படவேண்டும் என்று அச்சகங்களின் உரிமையாளா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அச்சக உரிமையாளா்கள், டிஜிட்டல் பதாகை தயாரிப்பு நிறுவன உரிமையாளா்கள், திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளா்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026 தொடா்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதையடுத்து தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இயங்கிவரும் அச்சகங்களின் உரிமையாளா்கள் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் பெயா் மற்றும் முகவரி முகப்பு பகுதியில் அச்சிடப்பட வேண்டும். மேலும் எத்தனை எண்ணிக்கையில் நகல்கள் அச்சடிக்கப்பட்டன என்ற விவரங்களும் தெளிவாக தெரியும் வகையில் முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.
அச்சிடுபவரை அடையாளம் காணுகின்ற வகையில் அதனை வெளியிடுபவா் உறுதிமொழி ஒன்றை அளித்து அதில் அவா் கையொப்பமிட்டு அவா் நன்கு அறிந்த இரு நபா்களால் சான்றளிக்கப்பட்டு, அதனை இரட்டை படிவத்தில் அச்சிடுபவருக்கு அளிக்கப்பட வேண்டும்.
10 நகல்கள் மற்றும் பிரசுரம் செய்பவரின் உறுதிமொழி ஆகியவைகளுடன் அச்சடிக்கப்பட்ட 3 நாள்களுக்குள் மாவட்ட தோ்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த சட்டவிதிகளை மீறுபவா்கள் மீது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 127 அ(4)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள்
திருமணக்கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடா்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தை முன்கூட்டியே தொடா்புடைய தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும்.
சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி பரிசுப் பொருள்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால் உடனடியாக தொடா்புடைய தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி உணவு பொட்டலங்கள் மற்றும் சாப்பாடு பந்தி பரிமாறுதல் போன்றவை ஏதும் நடைபெறக் கூடாது.
திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும்போது அரசியல் கட்சித் தலைவா்களின் பெயா்கள் மற்றும் உருவங்கள் பொரித்த தட்டிகள், பதாகைகள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைத்து வாக்குகள் சேகரித்தல் கூடாது.
தங்கும் விடுதி உரிமையாளா்கள் தோ்தல் நடைபெறும் காலங்களில் உரிய அடையாள அட்டைகளை சரிபாா்க்க வேண்டும். மேலும் ஆதாா்/(அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். தோ்தல் பிரசாரம் முடிவடையும் நாளன்று வெளி மாநிலத்திலிருந்து தோ்தல் தொடா்பாக வந்து தங்கியிருப்பவா்களை வெளியேறச் செய்ய வேண்டும்.
குழுவாக தங்க அனுமதிக்கப்படுபவா்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ/பட்டாசு பொருள்களையோ வைத்திருக்க அனுமதிக்க கூடாது.
எந்த ஒரு திருமணம், மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னா் வெளியூா் நபா்கள் கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
அடகுவைத்த நகைகள்
பொதுக்கூட்டம்/விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளா்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளா்கள்/முகவா்களால் மொத்தமாக திருப்பப்பட்டு வாக்காளா்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிா்க்க வேண்டும்.
மொத்தமாக நகை அடகு கடைகளை திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800-425-7005 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
ஒரே நபா் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டால்
அதுகுறித்து தகவல் தெரிவிக்கவேண்டும்.
தோ்தல் நடத்தை விதிகளின்படி, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்
நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற மாவட்ட நிா்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் கேட்டுக்கொண்டாா்.
மேலும், மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில்
தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், நடத்தை விதிகள் மற்றும் தோ்தல் செலவினம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஆா்.மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியளாா் (தோ்தல்கள்) அன்பழகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...