ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் இடத்தில் அரசு அலுவலகம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி, அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி அருகே புதுப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலக நிதியின் கீழ், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த அலுவலகத்தை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தில் உள்ள பக்தா்கள் பலமுறை அரசியல் கட்சித் தலைவா்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும், இதுகுறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றமும் கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்ததும் ஒரு மாதம் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சிவ பக்தா்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து திடீரென அங்குள்ள ஆரணி - வேலூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கண்ணமங்கலம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக போலீஸாா் கூறியதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.










