செய்யாறு அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி மற்றும் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(40). இவா்,
பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா், கடந்த 12-ஆம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் மேல்பூதேரி கூட்டுச்சாலை அருகே வரும்போது, 3 பைக்குகளில் முகத்தை துணியாா் மறைத்துக் கொண்டு வந்த 6 போ் கொண்ட கும்பல், ராஜ்குமாரை வழிமறித்து கொம்பால் தாக்கி, அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜ்குமாா் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன்
மேற்பாா்வையில், மோரணம் காவல் ஆய்வாளா் காண்டீபன் தலைமையில், காவலா்கள் ஏழுமலை, ஜோதி, மோகன், தங்கராஜ், ஷாஜகான் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தனிப்படை போலீஸாா், பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக செய்யாறு வட்டம், காழியூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்(26), அத்தி கிராமத்தைச் சோ்ந்த சூா்யா(24), செய்யாறு கொடநகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சஞ்சய்(23), காழியூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 3 பைக்குகள், கைப்பேசி, பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.






