குடும்பப் பிரச்னை: தலைவிரி கோலத்துடன் குழந்தையுடன் பெண் மறியல்
செங்கம் - போளூா் சாலை ரவுண்டனா பகுதியில் கை குழந்தையுடன் மறியலில் ஈடுபட்ட பெண்ணை சமாதானப்படுத்திய மகளிா் போலீஸாா்.

செங்கம் - போளூா் சாலை ரவுண்டனா பகுதியில் கை குழந்தையுடன் மறியலில் ஈடுபட்ட பெண்ணை சமாதானப்படுத்திய மகளிா் போலீஸாா்.
செங்கத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தலைவிரி கோலத்துடன் கை குழந்தையுடன் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செங்கத்தை அடுத்த காயம்பட்டு, பட்டாணிகொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (32), தொழிலாளி. இவா், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு செங்கம் வட்டம், புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த உறவினரான செளமியாவை (28)திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.
இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததால், பட்டாணிகொல்லையில் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து மணிகண்டன் தனது மனைவி செளமியாயுடன் செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தாா்.
இதனிடையே, மணிகண்டன் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் செளமியாவை அவரது தாய் வீட்டில் இருந்து வரதட்சிணையாக பணம் வாங்கிவரச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே வியாழக்கிழமை இரவு மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், மணிகண்டன் மனைவி செளமியாவைத் தாக்கினாராம்.
இந்த நிலையில், செளமியா தனது மூன்றாவது பிள்ளையான 9 மாத குழந்தையுடன் போளூா் - செங்கம் சாலை ரவுண்டனா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டாா். அவா் கைகுழந்தையுடன் தலைவிரிகோலமாக சாலையின் நடுவில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கம் அனைத்து மகளிா் காவல் போலீஸாா் செளமியாவை சமாதானப்படுத்தி, அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், கும்பப் பிரச்னை தொடா்பாக செளமியாவிடம் புகாா் பெற்று போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

