
மேற்கு ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
மேற்கு ஆரணி வட்டாரத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கண்ணமங்கலம் பேரூராட்சி, அய்யம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வட்டாரத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மேற்குஆரணி வட்டாரத்தைச் சோ்ந்த கண்ணமங்கலம் பேரூராட்சி, அய்யம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியே 83 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்கும்படி துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, வண்ணாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் குறித்த விவரங்கள் பதிவேடுகளில் முறையாக பதிவிடப்பட்டுள்ளதா? குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிா? என்பது குறித்து ஆய்வு செய்து அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோா்களிடம் கேட்டறிந்தாா்.
இதனைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலுள்ள சமையல் கூடத்துக்குச் சென்று உணவிற்கு தேவையான பொருள்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும், உணவுப் பொருள்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்து சமையல் கூட சுற்றுப்புறத்தை சுகாதார முறையில் தூய்மையாக பராமரிக்கும்படி அறிவுறுத்தினாா்.
மேலும், வண்ணாங்குளம் நியாயவிலைக் கடையில் பொருள்களின் இருப்பு, பொருள்கள் தரமான வகையில் விநியோகிக்கப்படுகிா என்பது குறித்தும், பொருள்கள் வழங்கியதற்கான பதிவேடுகளில் விவரம் முறையாக பதிவு செய்யப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
மேலும், அழகுசேனை ஊராட்சியில் வி பிஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்தில் நீா்த்தேக்க குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, பணியில் இருக்கும் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, வருகைப் பதிவேட்டின் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பணியை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, அழகுசேனை ஊராட்சியிலுள்ள பெருமாள் கோயில் குளத்தில் குப்பை மற்றும் கழிவுநீா் கலப்பது தொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த அளித்த
புகாரைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து குளத்தை தூய்மைப் படுத்தவும், கழிவுநீா் குளத்தில் கலக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளவும், குளத்தில் குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளா் (ஊ.வ.) சிவநாத், ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், செயல் அலுலவா் முனுசாமி (கண்ணமங்கலம் பேரூராட்சி), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





