ஜோலார்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் குடிநீர் குழாய்களை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 192 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காவும் குடிநீர் மற்றும் கழிப்பறை பயன்பாட்டுக்காக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்பள்ளியில் இரவு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் மர்ம நபர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி பள்ளிக்குள் சென்று மது அருந்துததல், ஜன்னல் உடைத்தல் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்கள், கழிப்பறை கட்டடத்தில் உள்ள குழாய்ககள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை தலைமையாசிரியை மேகலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டும், சின்டெக்ஸ் டேங்க் அசுத்தம் செய்யப்பட்டும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அசோகன் கூறுகையில், மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி செய்து வருகின்றனர். நாங்களும் உடைத்துச் சென்றவற்றை அடிக்கடி சரி செய்து வந்துள்ளோம். எனினும் இது தொடர்கதையாக உள்ளது. இதற்குக் காரணம் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லை.
இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களைப் பிடித்து துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 192 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் சத்துணவு செய்வதற்கு ஒரே ஒரு பணியாளர் மட்டும் உள்ளதால் சமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி அலுவலகத்துக்கு உதவியாளர்களும் இல்லை என்றார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தி, பள்ளியின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கேட்டை உயரமாக அமைத்து, பாதுகாப்பை ஏற்படுத்தித்தர வேண்டும், பள்ளியின் நிலையை அறிந்து சத்துணவு உதவியாளர், இரவு நேரக் காவலர் போன்றவர்களை துறை அதிகாரிகள் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.