
மேல்பாடி கிராமத்தில் பெருமாள் கோயிலில் புதையுண்டு கிடந்த ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை மற்றும் கருடாழ்வார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
காட்பாடி வட்டம், மேல்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதிலட்சுமி நாராயணப் பெருமாள் கற்கோயில் உள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்து பராமரிப்பின்றி இருந்ததால், இதை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய மேல்பாடி கிராம மக்கள் முடிவு செய்தனர். அதற்காக ஸ்ரீ ஆதிலட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் பொதுமக்களிடம் நிதி உதவிகள் பெற்று பணியைத் தொடங்கினர்.
இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. கோயிலின் பிரதான நுழைவு வாயில் படிக்கட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்த்தனர். அப்போது, படிக்கட்டுகளின் கீழ் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த ஒன்றரை அடி நீளமும், 3 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலையும், 1 அடி நீளமும் 2 கிலோ எடையும் கொண்ட கருடாழ்வார் சிலையும் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து ஸ்ரீ ஆதிலட்சுமி நாராயணப் பெருமாள் அறக்கட்டளைத் தலைவரும், மேல்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவருமான லட்சுமி பாண்டு மற்றும் கிராம மக்கள் பெருமாள், கருடாழ்வார் ஐம்பொன் சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் லதா ஆகியோருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் காட்பாடி துணை வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்டோருடன் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கோயில் புனரமைப்புப் பணி நடைபெற்று வருவதால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி கிராம மக்களின் முன்னிலையில் ஐம்பொன் சிலைகள் மேல்பாடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இக்கோயிலில் புதையுண்டு கிடந்து கண்டெடுக்கப்பட்ட பெருமாள், கருடாழ்வார் ஐம்பொன் சிலைகளை மீண்டும் அதே கோயிலில் பிரதிஷ்டை செய்து, கிராம மக்கள் வழிபட ஏதுவாக கோயில் நிர்வாகத்திடம் அச்சிலைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







