கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கும் ஏலகிரி மக்கள்

குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை ஏங்குகிறது.

News image
Updated On :5 ஜூன் 2019, 1:50 am

து. ரமேஷ்

குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை ஏங்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் குறிப்பிடத்தக்கது ஏலகிரி மலை. இந்த மலையை ஏழைகளின் ஊட்டி என அழைக்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை  சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி கோடை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறைக் காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏலகிரி மலை ஊராட்சியில் 14 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 6,355 ஆண்கள், 6,225 பெண்கள் என மொத்தம் 12,580 பேர் வசிக்கின்றனர். ஆண் வாக்காளர்கள் 2,340 பேரும், பெண் வாக்காளர்கள் 2,471பேரும் உள்ளனர்.
சிறப்புமிக்க ஏலகிரி மலை அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ளதாக இங்கு வாழும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதன் விவரம்:
தமிழ்நாடு வனத்துறை "வன பந்து கல்யான் யோஜனா' திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வழங்க கிராமங்களில் 14 ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைத்துள்ளது. ஆனால், அந்தத் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளன. 
சில ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்பு தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏலகிரி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூமிக்கடியில் பிளாஸ்டிக் குழாய் அமைத்து புங்கனூர் ஏரியின் அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் எடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த பிளாஸ்டிக் குழாய் அடிக்கடி பழுதடைந்து உடைந்து விடுவதால், அதற்குப் பதிலாக இரும்புக் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அத்தனாவூரில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணி தொடங்கியது. 
இப்பணி தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகியும் தொட்டி இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. மந்த கதியில் இப்பணி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இத்தொட்டிக்கு தண்ணீர் வழங்கும் கிணறு மிகவும் வறண்டு காட்சியளிக்கிறது. எனவே, இக்கிணற்றைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் அல்லது புதிய கிணறு தோண்ட வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
அதேபோல், படகுக் குழாம் சாலையில் அரசு மதுபானக் கடை இருந்தது.   இது சுற்றுலாப் பயணிகளிக்கு அசெளகரியமாக இருந்ததால், நெடுஞ்சாலைக்கு அருகில் 15 அடி தொலைவில் மாற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும், சுற்றுலாப் பயணிகளின் நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்ட தார்ச்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாகி விட்டது. அதேபோல், கொட்டையூர் செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதங்களாகியும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. 
மேலும், இந்தச் சாலை, படகுக் குழாமை ஒட்டியுள்ள சாலை என்பதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கொட்டையூர் பகுதி மக்களும் மிகவும் சிரமத்துள்ளாகி வருகின்றனர்.
ஏலகிரியில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. 108 ஆம்புலன்ஸ் வசதி, 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் வசதி ஆகியவை உள்ளன.
ஏலகிரியில் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை குறித்து ஏலகிரி மலையில் வசிக்கும் "ஏலகிரி குறிஞ்சி வானவில்' அறக்கட்டளையின் நிறுவனர் பொன்கதிர் கூறியது:
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. அதேபோல், சாலைகள் அமைக்கும் பணியும் நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பாக, ஏலகிரி மலையில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்டோரிடம் அண்மையில் கையொப்பம் பெற்று திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜிடம் கேட்டதற்கு, "அத்தனாவூர் நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை நேரில் பார்த்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஏலகிரி மலையில் வசிக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேறினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அந்த நாளையே அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.