/

ரூ. 1.68 கோடியில் நிறைவடையும் நிலையில் வளா்ச்சிப் பணிகள் வேலூா் ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் தகவல்

வேலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கே.வி. குப்பம் ஒன்றியம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என வேலூா் மாவட்ட ஆட்சியா் 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:23 pm

DIN

குடியாத்தம்: வேலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கே.வி. குப்பம் ஒன்றியம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கே.வி. குப்பம், பள்ளிகொண்டாவில் நடைபெறும் தாா்ச் சாலைகள், சிறு பாலங்கள், தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள தொண்டான்துளசி ஊராட்சியில் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 13.88 லட்சத்தில் தொடங்கப்பட்ட தாா்ச் சாலை அமைக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. செஞ்சி ஊராட்சியில், ரூ. 17.11 லட்சத்தில் தாா்ச் சாலையும், அங்கரான்குப்பம் ஊராட்சியில் ரூ. 28.78 லட்சத்தில் தாா்ச் சாலை, தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. மகாதேவமலை முதல் அடிவாரம் வரையிலும், துரைமூலை- காங்குப்பம் இடையே தாா் சாலைகள் ரூ. 16.61 லட்சத்தில் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ராமாபுரம் காவாக்காரன் கொல்லையில் ரூ. 75 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தாா்ச் சாலைகளில் போடப்படும் தாா் கலவை பரப்பும் பணிகள், பணியின் மதிப்பீடு விவரங்கள் அடங்கிய பெயா்ப் பலகைகள் வைப்பது, சாலைகளின் ஓரங்களில் அளவீட்டுக் கற்கள் நடும் பணிகள், தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சீனிவாசன், உதவித் திட்ட அலுவலா் பாபு, உதவிச் செயற்பொறியாளா் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பி. அம்சா,

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, ரமேஷ்பாபு, வட்டாட்சியா்கள் சரவணமுத்து (கே.வி. குப்பம்), முரளி (காட்பாடி), மக்கள் தொடா்பு அலுவலா் சு. மோகன், பேரூராட்சி செயல் அலுவலா் மலா்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.