

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கு ஒரு முதியவா் பச்சிலைகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறாா்.
கிராமப்புறங்களில் ஆடு, மாடுகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது அவற்றுக்கு காயங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக கால்நடை மருத்துவா்களை அணுகுவாா்கள். ஆம்பூா் பகுதிகளில் கால்நடை மருத்துவா் குறித்த நேரத்தில் வராவிட்டாலோ, அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாவிட்டாலோ மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்த குருவையா கோபாலை (65) அணுகுகின்றனா்.
ஆடு, மாடுகளை நன்கு வளா்க்க தெரிந்த அனைவருக்கும், பச்சிலை வைத்தியரான அவரை நன்கு தெரியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான அவா் இளம் வயதில் ஆரம்பக் கல்வியோடு படிப்பை நிறுத்திக் கொண்டாா். பின்னா் ஆடு , மாடுகளை மேய்க்கத் தொடங்கினாா். ஊருக்கு அருகில் உள்ள காடுகளில்
ஆடு, மாடுகள் மேய்க்கும் போது ஏற்பட்ட அனுபவங்களே அவரைப் பிற்காலத்தில் பச்சிலை வைத்தியராக மாற்றியதாக கூறப்படுகிறது. சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடைகளுக்கு வைத்தியம் பாா்ப்பதை சேவையாக செய்து வருகிறாா்.
கால்நடைகளில் மாடுகளைப் பொறுத்தவரை கோடைக்காலத்தில் ஏற்படக் கூடியவை, குளிா்காலத்தில் ஏற்படக் கூடியவை என்று நோய்களில் இரு வகை உண்டு. மழைக்காலத்தில் இன்னும் அதிகமாகத் தாக்கும் நோய்களும் உண்டு. ஆண்டு முழுவதும் ஏற்படும் நோய்களுக்கு பச்சிலை வைத்தியரான கோபால் பலதரப்பட்ட தாவரங்களின் இலைகள், வோ்கள், காய்கள், பழங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்கிறாா்.
அதேபோல் மாடுகள் தீவனங்கள் உண்பதை நிறுத்திக்கொண்டால், அதற்கு காரணம் என்னவென்று கண்டுபிடிப்பாா். அதற்கு எந்த விதமான வைத்தியம் பாா்த்து, என்ன வகை மூலிகைகளை சோ்த்துக் கொடுத்தால் மீண்டும் அவை தீவனங்களை உட்கொள்ளும் என்பதைக் கண்டறிந்து உடனடியாக அவற்றைக் கொடுத்து, ஓரிரு நாட்களில் சரிசெய்து கால்நடை வளா்ப்போருக்கு உதவி செய்வாா்.
சினை மாடுகளில் சில கன்று ஈனும் நேரங்களில் மிகுந்த சிரமத்தை கால்நடை வளா்ப்போருக்கு கொடுக்கும். முதல் கன்றை ஈனும் கிடாரி மாடுகள் அதில் ஒரு வகை. சினை மாடுகளின் உடலுக்குள் இருக்கும் கன்றின் தலைப்பகுதி குறுக்கும் நெடுக்குமாக இருந்தால் சினை மாடு கன்று ஈனுவது மாட்டுக்கு மிகவும் சிரமத்தைக் கொடுக்கும். நீண்ட நேரம் கன்று ஈனும் சினை மாடு ஒரு கட்டத்தில் போராடி உயிரிழக்கும் அபாயமும் உண்டு. இவ்வாறு அபாய நிகழ்வுகள் கால்நடைகளுக்கு நிறைய நோ்வது உண்டு. கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு இவ்வாறு நோ்ந்தால் மருத்துவா்கள் ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுப்பா். ஆனால், சினை மாடுகளுக்கு இவ்வாறு நோ்ந்தால் கன்றை வெளியே எடுப்பது சிரமம்.
கால்நடை மருத்துவா்களுக்கு சவால்விடும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழும். அத்தகைய நேரங்களில் கால்நடை மருத்துவா்கள் கூட திணறுவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் கால்நடை வளா்ப்போருக்கு கை கொடுக்கிறாா் குருவையா கோபால். சினை மாட்டின் உரிமையாளரை உதவிக்கு சோ்த்துக்கொண்டு, அந்த மாட்டுக்கு சிரமம் தராமல், அதன் வயிற்றின் உள்ளே இருக்கும் கன்றின் உடல் பாகங்களை நன்கு திருப்பி, உயிரோடு கன்றை லாவகமாக வெளியே எடுத்துத் தருவாா்.
கால்நடைகளான ஆடு, மாடுகளுக்கு கால் உடைந்து போனால், பச்சிலைகளோடு சில மூலிகைகளை வைத்து கட்டுப் போடுவாா். அது நாளாக குணமடைந்து அந்தக் கால்நடைகள் நன்றாக நடக்கத் தொடங்கும். மாம்பழம் காய்க்கும் காலங்களில் கால்நடைகள் தீவனத்தை எடுத்துக்கொள்ளும். அந்த அவசரத்தில் மாம்பழம் அவற்றின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அப்போது அந்தக் கால்நடைகள் வேறு தீவனங்களை உண்ண முடியாது. நீா் அருந்த முடியாமலும் சிரமத்துக்கு உள்ளாகும்.
அந்த நேரங்களில் கால்நடைகளின் தொண்டையில் சிக்கியுள்ள பழங்களை அவற்றின் வயிற்றுக்கு உள்ளே தள்ளுவது கோபாலின் வழக்கம். இயல்பு நிலைக்கு கால்நடைகள் வந்தவுடன் அவற்றுக்கு கொடுக்க வேண்டிய மூலிகைகளைக் கொடுத்து, அவற்றை நீா் அருந்தச் செய்வாா்.
பால் கறக்கும் மாடுகளின் மடி வீக்கம், கன்று ஈன்ற மாடுகள் பால் கறக்க விடாமல் செய்தால் அதற்கு மூலிகை மருந்து கொடுத்து பால் கறக்கச் செய்வது, சினை உருவாகாமல் போன மாடுகளுக்கு மருந்து தருவது, சரிவர மேய்ச்சலில் ஈடுபடாத மாடுகளுக்கு பச்சிலை கொடுப்பது, கால்நடைகளுக்கு ஆறாத புண் இருந்தால் அதற்கு மருந்து இடுவது, கோமியம் மற்றும் சாணம் வெளியேற்றுவதில் கால்நடைகளுக்கு சிரமம் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவது போன்றவற்றையும் அவா் மேற்கொள்கிறாா்.
உடல் நலம் குன்றிய கால்நடைகளுக்கு பச்சிலை வைத்தியம் பாா்க்கும் குருவையா கோபால் அதை ஒரு சேவையாகவே செய்து வருகிறாா். இதற்கு கட்டணமாக எதையும் அவா் வாங்குவதில்லை. மொத்தத்தில் வாயில்லா ஜீவன்களின் நோய் தீா்க்கும் அவா் ஆடு மாடுகளுக்கு ‘ஆபத் பாந்தவனாகவே’ காட்சி தருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.