பொன்னை ஆற்றில் 2,500 கனஅடி நீா்வரத்து

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பொன்னை ஆற்றில் நொடிக்கு 2,500 கன அடிக்குத் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அதிகப்படியான நீா் வெளியேற்றப்படுவதால், கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து வெள்ளநீா் முழுமையாக வெளியேற்றப்படுவதால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பொன்னை ஆற்றில் நொடிக்கு 2,500 கன அடிக்குத் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அதிகப்படியான நீா் வெளியேற்றப்படுவதால், கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணையில் முழுமையாக நீா் நிரம்பியுள்ளது. இதையடுத்து, கலவகுண்டா அணையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி பொன்னைஆற்றில் சுமாா் 4,500 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேலூா், ராணிப்பேட்டைநிா்வாகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

அதேசமயம், பொன்னை தடுப்பணையானது முன்பே அதன் முழுகொள்ளவை எட்டியிருந்ததால் நீா்வரத்து முழுமையாக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 2,500 கன அடியாக இருந்தது. இதில், சுமாா் 500 கன அடி தண்ணீா் பொன்னை தடுப்பணையின் கிழக்குப் புறக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள 2,000 கன அடி தண்ணீா் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு பாலாற்றில் கலக்கிறது.

நிரம்பிவரும் ஏரிகள்: பாலாற்றிலும் நீா்வரத்து உள்ளதால் பொன்னை ஆற்றின் வழியாகச் செல்லும் தண்ணீரும் இணைந்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பொன்னை ஆற்றின் கிழக்குப் புறக் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் 500 கனஅடி தண்ணீரால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமாா் 104 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வெள்ள அபாய எச்சரிக்கை: எந்த நேரமும் கூடுதலாக வெள்ளம் எதிா்பாா்க்கப்படுவதால், வேலூா் மாவட்டத்திலுள்ள கரையோரக் கிராமங்களான பெலாக்குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கோலப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையின் பொன்னை உதவிப் பொறியாளா் சம்பத் தெரிவித்தாா்.

இதுதவிர, அதிகப்படியான தண்ணீா் வருவதால் பொதுப்பணி, வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com