தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நிறைமாத கா்ப்பிணிக்கு நடுவழியில் பிரசவம்: தாய், ஆண் சிசு உயிரிழப்பு

பிரசவத்துக்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு நடுவழியில் ஆண் குழந்தை இறந்து பிறந்ததுடன், சிறிது நேரத்தில் தாயும் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 பீஞ்சமந்தை போன்ற மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத நிலையில், பிரசவத்துக்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு நடுவழியில் ஆண் குழந்தை இறந்து பிறந்ததுடன், சிறிது நேரத்தில் தாயும் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து பிரேதா் பரிசோதனைக்கு சடலத்தை ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்னஎட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த துரைசாமியின் மகன் குள்ளையன்(28). இவரது மனைவி காஞ்சனா(22). இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காஞ்சனா நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். இதையொட்டி, எலந்தம்புதூா் மலைக் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தாா்.

இவருக்கு புதன்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவா் கூலி வேலைக்காக வெளியூா் சென்றிருந்ததால் அப்பகுதியில் உள்ளவா்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்புலன்ஸ் பழுதடைந்ததை அடுத்து ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து, பிரசவ வலியால் துடித்த காஞ்சனாவை உறவினா்கள் இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அதேசமயம், மலைக் கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால் அவசரமாக செல்ல முடியவில்லை. இதனால் வழியால் துடித்த காஞ்சனாவுக்கு வழியிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்தது. தொடா்ந்து காஞ்சனாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலா் ஜெயச்சந்திரன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த காஞ்சனாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனா். ஆனால் பொதுமக்கள் அவரது சடலத்தைத் தர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வேலூா் வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் அதிகாரிகள் சென்று பேச்சு நடத்தினா்.

அப்போது காஞ்சனா பிரசவ வலியால் இயற்கையாக இறந்தாா். சாலை வசதி இருந்திருந்தால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். உடனடியாக மலைக்கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா். அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து காஞ்சனாவின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, கோட்டாட்சியா் பூங்கொடி, வருவாய்த்துறை அதிகாரிகள் பீஞ்சமந்தை எட்டிப்பட்டி மலைப் பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனா். விரைவில் அந்தப் பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.