பாமக ஆட்சிக்கு வந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தட்டும்: அமைச்சர் துரைமுருகன்
பாமக ஆட்சிக்கு வந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தட்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்கு முன்பு திமுக அளித்திருந்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாமக ஆட்சிக்கு வந்து பூரண மதுவிலக்கை கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சிக்குட்பட்ட வள்ளிமலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, நீதிமன்ற வழக்கு விசாரணைகளை உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்டகால கொள்கை யாகும். இப்போதுதான் அதுகுறித்து பிரதமர் கூறியுள்ளார். அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தப்பி வருகின்றனர். இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூறியும் மத்திய அரசு மெளனம் காக்கிறது.
அவர்கள் எப்போதுதான் மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளது?. அதேசமயம், வடஇந்தியனுக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா?. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படும். மேலும், தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். பாமக ஆட்சிக்கு வந்து பூரண மதுவிலக்கை கொண்டு வரட்டும். நீர் வளத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன.
அவற்றை நிரப்ப நிதிப் பற்றாக்குறை உள்ளது. நிதித்துறையின் நிதி கோரியுள்ளோம். வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இரு இடங்களில் மணல் குவாரி தொடங்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளோம் என்றார். மேலும், புதிதாக திறக்கப்பட்டுள்ள குவாரிகளில் லாரி உரிமையாளர்களுக்கு மணல் எடுக்க அனுமதி மறுக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் நேரில் சென்று பணம் கட்டி லாரியில் மணல் வாங்கிக் கொள்ளலாம் என்றார் துரைமுருகன். இதில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், துணைமேயர் எம்.சுனில்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...