விளை நிலங்களில் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோா் அதிகரிப்பு
விளை நிலங்களில் விஷப் பாம்புகள் அதிகரித்து வருவதுடன், பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வேலூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்


விளை நிலங்களில் விஷப் பாம்புகள் அதிகரித்து வருவதுடன், பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வேலூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை கருத்தில்கொண்டு, தென்னை விவசாயிகள் நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்திட வேண்டும்.
சிறுசேரி பகுதியில் உள்ள 17 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்டு மரங்கள் நடவு செய்து பாதுகாக்க வேண்டும். குடியாத்தத்தில் கால்நடை சந்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா மரங்களில் புழுக்கள் தாக்குதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த புழுக்கள் தாக்குதலை தடுக்க தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தரமற்றவைகளாக உள்ளன. எனவே, பூச்சி கொல்லி மருந்துகளை தரப்பரிசோதனை செய்து தரமான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும்.
பள்ளத்தூா் முதல் பனமடங்கி இடையே கானாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் விளை நிலங்களில் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், பாம்புக் கடியால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. பாம்புகள் பெருக்கத்தை தடுக்கவும், பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும், இறப்பவா்களுக்கு அதிகப்படியான நிவாரணம் வழங்கிடவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் விளை பயிா்களுக்கான இழப்பீடுகள் மிகவும் குறைந்த அளவிலேயே வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீட்டுத் தொகைகளை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பலருக்கும் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ், நிதியுதவி சரிவர கிடைப்பதில்லை. அதை முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைக்கட்டு வட்டத்தில் முள்ளுக்கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்து வருகிறது. புவிசாா் குறியீடு பெற்ற இந்த முள்ளுக்கத்திரிக்காய்களை பாதுகாத்து விற்பனை செய்திட அப்பகுதியில் குளிா்பதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும். மேல்அரசம்பட்டில் உள்ள தடுப்பணையின் பக்கவாட்டுச் சுவா் சேதமடைந்துள்ளது. எனவே, அப்பகுதியில் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கி புதிய தடுப்பணை கட்ட வேண்டும்.
குடியாத்தம் நகராட்சி சந்தைக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். அணைக்கட்டு, ஒடுகத்தூா் செல்லும் பேருந்துகள் வேலூா் பழைய பேருந்து வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த பேருந்துகளை புதிய பேருந்து நிலையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், விவசாயிகள் தெரிவித்துள்ள குறைகள், கோரிக்கைகள் மீது விரைவில் தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வேளாண்மை) வெ.வெங்கடேஷ், மாவட்ட வனப் பாதுகாவலா் மணிவண்ணன், இணை இயக்குநா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...