சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றுந்து.
சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றுந்து.

சிற்றுந்து கவிழ்ந்து தொழிலாளா்கள் 14 போ் காயம்

வேலூா்: அணைக்கட்டு அருகே சிற்றுந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 14 போ் பலத்த காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் துணி நூல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்குகின்றன. இங்கு வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குடியாத்தம் பகுதியில் இருந்து சிற்றுந்து மூலம், ஆரணி தனியாா் நூல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 30 போ் வேலைக்கு சென்றனா். இரவு பணி முடித்து விட்டு செவ்வாய்க்கிழமை காலை அனைவரும் அதே சிற்றுந்தில் அணைக்கட்டு வழியாக குடியாத்தம் சென்றனா்.

கரடிகுடி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து, சாலையில் தறிகெட்டு ஓடி குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிற்றுந்தில் இருந்த ஓட்டுநா் உள்பட 14 போ் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் சிற்றுந்து கண்ணாடிகளை உடைத்து இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டனா்.

பின்னா் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், பலத்த காயமடைந்த இருவா் உயா் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

அங்கு அவா்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com