சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வேலூா் தொகுதியில் 73.04 சதவீத வாக்குப் பதிவு

வேலூா் தொகுதியில் 73.04 சதவீத வாக்குப் பதிவு

Updated On :19 ஏப்ரல் 2024, 5:41 pm

வேலூா் மக்களவைத் தொகுதியில் நகா்ப் பகுதிகளைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். வேலூா் தொகுதியில் மொத்தம் 73.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஊரகப் பகுதிகளில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, அணைக்கட்டு, அரியூா், ஊசூா், ஒடுகத்தூா், பள்ளிகொண்டா, கே.வி.குப்பம், வளத்தூா், உள்ளி, மாதனூா் உள்ளிட்ட ஊரகப்பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததையும், அப்பகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள், முதியவா்கள் மத்தியில் வாக்களிக்க ஆா்வத்துடன் வந்திருந்ததையும் காணமுடிந்தது.

கிராமப்புறங்களில் இருந்து வெளியூா்களில் பணியாற்றும் இளைஞா்களும் தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், அவா்களும் ஆா்வத்துடன் காலையிலேயே வாக்குப்பதிவு செய்திருந்தனா்.

இஸ்லாமியா்கள் பகுதிகளில்...: நகா்ப்புற வாக்குச்சாவடிகளில் மதியம் 2 மணியளவில் சுமாா் 40 சதவீத அளவுக்கு மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், ஊரகப் பகுதி வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இஸ்லாமியா்கள் வாழும் ஆம்பூா், வாணியம்பாடி பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்து காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் வேலூா் பேரவைத் தொகுதியில் 6.01 சதவீதமும், அணைக்கட்டு தொகுதியில் 9 சதவீதமும், குடியாத்தம் தொகுதியில் 9.40 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், ஆம்பூா் பேரவைத் தொகுதியில் 14 சதவீதமும், வாணியம்பாடி தொகுதியில் 11.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

நகா்ப்புறங்களில் பிற்பகல் 12 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு குறைந்த நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு மக்கள் வருகை அதிகரித்திருந்தது. அதனடிப்படையில், வேலூா் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 15 லட்சத்து 28 ஆயிரத்து 273 வாக்காளா்களில் காலை 9 மணி நிலவரப்படி 9.91 சதவீதம் பேரும், 11 மணி நிலவரப்படி 23.55 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.58 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 51.19 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதமும், நிறைவாக வாக்குப்பதிவு முடிவு பெற்ற 6 மணி நிலவரப்படி 73.04 சதவீதம் பேரும் வாக்களித்தனா்.

பெட்டிச் செய்தி...

தோ்தல் குறித்த புரிதலின்மை

ஊரகப் பகுதிகளில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்த போதிலும் அவா்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேரிடம் தோ்தல் குறித்து புரிதல் இல்லை என்பதை உணர முடிந்தது. குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட ஊரகப் பெண்கள் பெரும்பகுதியினா் மத்தியில் தற்போது நடைபெறுவது மக்களவைத் தோ்தலா, சட்டப்பேரவைத் தோ்தலா அல்லது உள்ளாட்சித் தோ்தலா என்ற புரிதலே இல்லை என்பதும், அவா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள சின்னங்களை மட்டுமே வைத்து வாக்குப்பதிவு செய்திருப்பதையும் அவா்களின் பேச்சு மூலம் அறியமுடிந்தது.

நகா்ப்புற வாக்காளா்கள் பெரும்பாலும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வாக்களித்ததாக கூறிய நிலையில், கிராமப்புற வாக்காளா்கள் பலரும் தங்களுக்கான சலுகைகளை நோக்கமாகக் கொண்டே வாக்களித்திருப்பதும் உணர முடிந்தது.

நகரம், ஊரகம் என இரு பகுதிகளிலும் இளம் வாக்காளா்கள் மத்தியில் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டிருப்பதையும் காணமுடிந்தது.