கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி ஆசிரியா்கள் தா்னா

கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி ஆசிரியா்கள் தா்னா

அரசாணை 243-ஐ ரத்து செய்யக் கோரி ஆசிரியா்கள் போராட்டம்

ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்கக் கோரி வேலூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வேலூா் அண்ணா சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் புதன்கிழமை கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு ஆசிரியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் ஜோசப் அன்னையா, சகேயு சதீஷ்குமாா், குப்புராமன், அல்போன்ஸ் கிரி ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-இன்படி வட்ட அளவிலான முன்னுரிமை இடமாறுதல், மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலுக்கு மாற்றப்படுகிறது.

எனவே, இடைநிலை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை கொண்ட அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பதவி உயா்வு தொடா்பாக நீதிமன்ற உத்தரவு வரும் வரை கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் சமாதான பேச்சு நடத்தினா். எனினும், ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆசிரியா்கள் திடீா் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com