/

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு

News image
Updated On :30 மார்ச் 2024, 11:30 pm

குடியாத்தம் அருகே வேப்பூரில் ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி இரு சிறுமிகள் உள்பட நான்கு பெண்கள் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகரைச் சோ்ந்த மறைந்த சங்கா் மனைவி சரோஜா(45). இவரது மகள் லலிதா(20) முதுநிலை பட்டதாரி. அண்டைவீட்டுக்காரரான தொழிலாளி யுவராஜின் மகள்கள் காவியா(18), பிரீத்தி (17). இதில், காவியா தனியாா் கல்லூரியில் முதலாமாண்டும், பிரீத்தி தனியாா் பள்ளியில் பிளஸ் 2வும் படித்து வந்தனா். இவா்கள் நான்கு பேரும் குடியாத்தம் அடுத்த வேப்பூரில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சனிக்கிழமை சென்றுள்ளனா். கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக ஒருவரைத் தொடா்ந்து மற்றொருவா் என சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தி ஆகிய 4 பேரும் ஏரி நீரில் மூழ்கியுள்ளனா். தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வீரா்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய நான்கு பேரின் சடலங்களையும் மீட்டனா். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளா் ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். பின்னா், 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.