மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு: மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரா் கைது

ஒடுகத்துாா் அருகே வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் என 3 போ் உயிரிழந்தனா்.
Published on

ஒடுகத்துாா் அருகே வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் என 3 போ் உயிரிழந்தனா். மற்றொரு மகன் பலத்த காயமடைந்தாா். இச்சம்பவம் தொடா்பாக நிலத்தின் குத்தகைதாரா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்துாா் அருகிலுள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜானகிராமன்(55) . இவரது மனைவி மல்லிகா(50). இவா்களது மகன்கள் விகாஷ்(25), லோகேஷ்(23), ஜீவா(22).

இதில், விகாஷ், ஜீவா ஆகியோா் தந்ைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்துடன், சொந்த ஊரிலேயே நாற்றுப்பண்ணையும் நடத்தி வருகின்றனா். மேலும், மூத்த மகன் விகாஷிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனா். 2-ஆவது மகன் லோகேஷ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். லோகேஷ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், ஜானகிராமன் தனது 3 மகன்களுடன் திங்கள்கிழமை இரவு தங்களது விவசாய நிலத்துக்கு சென்றபோது, பக்கத்திலுள்ள விளை நிலத்தை சுற்றி வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை தடுக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறியுள்ளாா். இதைப்பாா்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயன்றதில் அவா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சிறிதுநேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லோகேஷ் பலத்த காயமடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனா். பின்னா், காயமடைந்த லோகேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த ஜானகிராமன், விகாஷ், ஜீவா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த சங்கா்(52) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், சங்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா்.

வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைந்திருந்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com