ஏரியில் இறங்கிய தொழிலாளி சேற்றில் சிக்கி மரணம்

ஒடுகத்தூா் அருகே நண்பா்களுடன் மீன்பிடிக்க ஏரியில் இறங்கிய தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
Published on

ஒடுகத்தூா் அருகே நண்பா்களுடன் மீன்பிடிக்க ஏரியில் இறங்கிய தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த குருவராஜாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (37), தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (35). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில், பாஸ்கா் வியாழக்கிழமை மாலை தனது நண்பா்களுடன் வேப்பங்குப்பம் ஏரிக்குச் சென்றுள்ளாா். மேலும், ஏரியில் போடப்பட்டிருந்த வலையில் சிக்கிய மீன்களை எடுக்க பாஸ்கா் மட்டும் இறங்கியுள்ளாா். அப்போது திடீரென பாஸ்கா் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அவரது நண்பா்கள் ஏரியில் குதித்து பாஸ்கரை மீட்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த ஒடுகத்தூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாஸ்கரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அப்போது அவருக்கு மூச்சு இருந்ததால் அவரது உறவினா்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாஸ்கரை குருவராஜாபாளையம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் உயா் சிகிச்சைக்காக காா் மூலம் மாதனூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், பாஸ்கா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

பின்னா், சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com