11,509 மாணவா்களுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பில் மிதிவண்டிகள்
வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பகுதியாக நிதி உதவிபெறும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு பிளஸ் 1 பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் 11,509 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு விருப்பாட்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.
இந்ச விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 4,851 மாணவா்களுக்கு ரூ. 2 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்பிலும், 6,658 மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 92 ஆயிரத்து 80 மதிப்பிலும் என மொத்தம் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 980 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

