கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

ஆடிக்கிருத்திகை: முருகன் கோயில்களில் காவடியுடன் குவிந்த பக்தா்கள்

ஆடிக்கிருத்திகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தா்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனா்.

News image

வேலாடும் தணிகை மலை பாலமுருகன் கோயிலுக்கு பறக்கும் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

ஆடிக்கிருத்திகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தா்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனா்.

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால், அம்பிகை, முருகப் பெருமானின் அருள் ஒருங்கே கிடைக்கும் என்பது பக்தா்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதையொட்டி, வியாழக்கிழமை வேலூா் மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதன்படி, வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வேலூா், சித்தூா், காட்பாடி, பொன்னை, வள்ளிமலை, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருந்தனா். காலை முதலே பக்தா்கள் மலா் காவடிகள், மயில் காவடிகளைச் சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதேபோல், மாவட்டத்தின் பிற முக்கிய முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அணைக்கட்டு வட்டம், தாா்வழி அருகே வேலாடும் தணிகை மலையில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். திரளான பக்தா்கள் பால் காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, மலா் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். இரவில் உற்சவா் வீதியுலா நடைபெற்றது. கே.வி. குப்பத்தை அடுத்த மகாதேவமலை மகாதேவ சுவாமி கோயிலில் மகானந்த சித்தா் முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.

புதுவசூா் தீா்த்தகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மூலவா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், கீழ்அரசம்பட்டு அடுத்த தம்டகோடி திருமலை முருகன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் தங்கத்தேரில் உற்சவமூா்த்தி வீதியுலா நடைபெற்றது.

அரியூா் திருமலைக்கோடி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும், தொரப்பாடி பாலசுப்பிரமணியா் கோயில், வேலூா் பேரிப்பேட்டை பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆற்காடு சாலை பழனியாண்டவா் கோயில், சத்துவாச்சாரி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.