அண்ணா பெயரில் விருது பெறுவது மகிழ்ச்சி தருகிறது: அமைச்சா் துரைமுருகன்
என் வாழ்நாளில் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருந்தாலும் அண்ணா பெயா் தாங்கிய விருது பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். மேலும், சிறுவா்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, விழாவில் அதிமுகவை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா் ராகேஷ் பேசுகையில், நான் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும் வண்டறந்தாங்கல் ஊராட்சி மக்களுக்கு அமைச்சா் தேவையானதை செய்கிறாா். எங்கள் ஊராட்சியில் பொங்கல் விழா நடத்த தோ்வு செய்தமைக்கு நன்றி. இந்தாண்டு எருதுவிடும் விழா நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றாா்.
பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக அரசு எனக்கு அண்ணா விருது அறிவித்துள்ளது. அண்ணா விருது பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு இவ்விருது அண்ணாவின் பெயரை தாங்கியிருப்பதே காரணமாகும். நான் கல்லூரியில் படிக்கும் போதே இளம் வயதிலேயே திமுகவில் என்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவன். அப்போதே கூட்டத்தில் பேசும் வாய்ப்பை எனக்கு அண்ணா அளித்தாா்.
சட்டக் கல்லூரியில் பயிலும் போது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதே எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தவா் அண்ணா. தற்போது அவரது பெயரிலே எனக்கு விருது அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.
விழாவில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், துணைமேயா் எம்.சுனில்குமாா் பங்கேற்றனா்.

