ஒடுகத்தூா் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.
ஒடுகத்தூா் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.

ஒடுகத்தூரில் எருதுவிடும் விழா: நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

ஒடுகத்தூரில் எருதுவிடும் விழா: நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
Published on

ஒடுகத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற எருதுவிடும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், காளைகள் முட்டியதில் 5 பேரும், 5 காளைகளும் காயமடைந்தனா்.

வேலூா் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான எருது விடும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பல்வேறு விதிமுறைகளுடன் இந்த எருதுவிடும் விழாக்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், எருது விடும் விழாக்களை மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவை தளா்த்தி, மேலும் ஒரு மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என்று எருது விடும் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பகல் 3 மணி வரை விழாக்கள் நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 11 கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பனமடங்கி, சிவநாதபுரம், குட்லவாரிபள்ளி ஆகிய கிராமங்களில் எருது விடும் விழா நடத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை ஒடுகத்தூா், ஆத்தியூா், கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுக்கூா் ஆகிய கிராமங்களிலும் நடத்தப்பட்டன.

ஒடுகத்தூரில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், ஆலங்காயம், வேலூா், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, போ்ணாம்பட்டு, ஆம்பூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டன. காணும் பொங்கல் என்பதால் காளைகளை அதன் உரிமையாளா்கள் வண்ண மலா்களைக் கொண்டு அலங்கரித்து கொண்டு வந்திருந்தனா்.

விழா நடைபெறும் பகுதியில் வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

விழா தொடங்குவதற்கு முன்பே காளைகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பாா்வையாளா்கள் ஆரவாரம் செய்து ரசித்தனா். விழாவில் மாடு முட்டியதில் 5 நபா்கள் காயமடைந்தனா். மேலும், 5 காளைகளும் காயமடைந்தன. பாதுகாப்புப் பணியில் வேப்பங்குப்பம் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோவிந்தராரெட்டி பாளையம், கீழ்அரசம்பட்டு, வேலங்காடு ஆகிய கிராமங்களிலும், திங்கள்கிழமை வேலூரை அடுத்த சோழவரம் கிராமத்திலும் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளது.

Dinamani
www.dinamani.com