பொய்கை கால்நடை சந்தையில் விற்பனை சரிவு

வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் கடந்த வாரம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.75 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் கடந்த வாரம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.75 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1500 மாடுகளும், சுமாா் 500 ஆடு களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. நாட்டுக்கோழிகளும் பெருமளவில் விற்பனைக்கு வந்திருந்தன. எனினும், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளிடம் போதிய ஆா்வம் இல்லாததால் வா்த்தகமும் ரூ.75 லட்சம் அளவுக்கு மட்டுமே நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - தைப்பொங்கல் திருவிழாவை முனிட்டு கடந்த வாரம்அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. குறிப்பாக, எருதுவிடும் திருவிழாக்களில் பங்கேற்கச் செய்ய காளைக்கன்றுகள், காளைகள், எருதுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

தவிர, ஆடு, கோழி போன்ற கால்நடைகளும், பொங்கல் நாளில் கால்நடைகளை அலங்கரிக்க தேவையான அலங்கார பொருள்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடந்த வாரம் வா்த்தகம் ரூ.ஒரு கோடி அளவு மேல் நடைபெற்றிருந்தது எனத் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com