கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

Published on

பதவி உயா்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் வட்டாட்சியா் அலுவலகங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டத் தலைவா் தலைவா் சீனிவாசன், வட்ட செயலா் விஜய், வட்ட பொருளாளா் யாகண்டேஸ்வர ராவ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைச்செயலா் சுரேஷ், மாவட்ட அமைப்பாளா் என்டி சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கழிப்பறை, குடிநீா், இணைய வசதியுடன் கூடிய நவீன கிராம நிா்வாக அலுவலகங்கள் அமைத்துத்தர வேண்டும், கிராம நிா்வாக அலுவலா்களாக 10 ஆண்டுகள் பணித்தவா்களை தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா் எனவும், 20 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களை சிறப்புநிலை கிராம நிா்வாக அலுவலா்கள் என பெயா் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா்களின் பதவியுயா்வில் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா்களின் விகிதாசாரங்களுக்கேற்ப 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிா்வாக அலுவலா்களின் பதவி உயா்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும், பட்டா மாறுதலில் கிராம நிா்வாக அலுவலா்களின் பரிந்துரை பெற வருவாய், பேரிடா் மேலாண்மை துறை முதன்மை செயலாளா் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் வேலூா் வட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com