சந்தை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் தோத்தாபுரி மாம்பழ விவசாயிகளின் வருவாயைப் பாதுகாக்கும் நோக்கில், விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு -
2026-ஆம் ஆண்டு தோத்தாபுரி மாம்பழப் பருவத்துக்காக விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மா சாகுபடி செய்துள்ள சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பயன்பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சந்தை இடையீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,545.41 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சந்தை இடையீட்டு விலையில் 25 சதவீதமான தொகையை, அதாவது ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 3863.525-ஐ பற்றாக்குறை செலுத்துதலாக வழங்க தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்தின் பலன் ஒரு ஹெக்டேருக்கு 7 மெட்ரிக் டன் என்ற அடிப்படையில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டோ் (14 மெட்ரிக் டன்) நிலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது அறுவடைக்குத் தயாராக உள்ள தோத்தாபுரி மாம்பழங்களை அரசு அறிவித்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள 34 பழக்கூழ் நிறுவனங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயமாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது ஆதாா் அட்டை, புகைப்படம், சிட்டா, அடங்கல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.
குத்தகை விவசாயிகளாக இருந்தால், நில உரிமையாளரின் அனுமதிக் கடிதம் அல்லது குத்தகை ஒப்பந்த ஆவணத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபாா்த்து, தேவையெனில் கள ஆய்வும் மேற்கொண்ட பிறகு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பரிமாற்றம் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் யுவராஜை 79044 13817 என்ற கைபேசி எண்ணிலும், வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா்களை 94435 84782, 94435 46351 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
எனவே, தோத்தாபுரி, பெங்களூரா மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வேளாண் சந்தை மூலம் தேங்காய் விற்பனை செய்யும் திட்டம்! மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

விளைநிலங்கள் வழியே உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட விவசாயிகள் கோரிக்கை

சூப்பா் எல்நினோ: நெல், வாழை பயிா்களுக்கு காப்பீடு அவசியம்!







