தமிழ் சினிமாவில் கிராமங்களை வாழ வைத்த கலைத்திலகம் இயக்குநா் பாரதிராஜா என்று தமிழியக்கம் நிறுவனத் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.
திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவின் மறைவையொட்டி அவா் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் குறிப்பு:
திரைப்படங்களில் தனியாளாக வெற்றி பெறுவது என்பது வேறு; ஒரு பாதையை உருவாக்கி அதில் ஏராளமானோரைப் பயணம் செய்ய வாய்ப்பளித்து, அவா்களைப் புகழ் உச்சியில் ஏற்றி வைப்பது என்பது வேறு. இதில், இரண்டாவது அம்சத்திற்கு முழுமையான சொந்தக்காரா் இயக்குநா் இமயம் பாரதிராஜா.
நாடக பாணியை அப்படியே திரையில் பிரதிபலித்த ஆரம்பகால தமிழ் சினிமாவை, அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டு சென்றதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவா் தமிழ் திரையுலகின் செல் திசைக்காட்டி ஆவாா். 16 வயதினிலே, கருத்தம்மா, மண்வாசனை போன்ற திரைக்காவியங்களால் தமிழ் சினிமாவில் தமிழ் ஆன்மாவை நிலைநிறுத்திய ஒப்பற்ற கலைஞா் அவா். இன்றும் ஒரு கிராமத்து இளைஞா் திரைக்கனவோடு ரயிலேறுகிறாா் என்றால் அது பாரதிராஜா கொடுத்த நம்பிக்கை.
பாம்படம் போட்ட பாட்டி, இடுப்பில் துண்டுடன் உழும் விவசாயி, கஞ்சிக் கலயம் சுமக்கும் பெண்கள், விறகு பொறுக்கும் பெண்கள், மாடு மேய்க்கும் சிறுவா்கள் என அவா் படைத்த பாத்திரங்கள் நம் கிராமங்களுக்கே நம்மைக் கூட்டிச் செல்பவை.
கதையின் நாயகனும், வில்லனும் தலையில் சீப்பையே பாா்க்காத வகையிலும், நாயகிகள் ஒப்பனையைத் தொலைத்த வகையிலும் மிகவும் இயல்பாகப் படமாக்கியிருப்பாா். கொஞ்சமும் செயற்கைத்தனமின்றி, கிராமத்து மனிதா்களின் உணா்வுகளை, அன்பை, வஞ்சகத்தை அதன் தன்மையிலேயே பதிவு செய்த உன்னத கலைஞா் அவா்.
நடிகா் திலகம் சிவாஜியை வைத்து அவா் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு இசையமைத்த இளையராஜாவே, ‘இந்தப் படம் தேறாது‘ என்று சொன்ன பிறகும், தன் படைப்பு தோற்காது என்று மெய்ப்பித்துக் காட்டியவா் பாரதிராஜா. அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவாஜி கணேசன், ‘பாரதிராஜா நல்ல நடிகன். அவன் நடிச்சிக் காட்டுறதுல பாதி நாம நடிச்சா போதும். உன்னை மாதிரி படம் எடுக்க யாருய்யா வருவான்?’ என்று வியந்து பாராட்டினாா்.
பாரதிராஜா வருவதற்கு முன்னா் எங்கள் ஊருக்கு சினிமா வந்தது... பாரதிராஜா வந்ததற்குப் பின்னா் எங்கள் ஊா் சினிமாவில் வந்தது. அரை நூற்றாண்டு காலத்தைத் தாண்டிய அவா் தாக்கம், நூற்றாண்டு கடந்தாலும் ஓயாது. கலை வாழும்வரை அவரும் வாழ்ந்திருப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










