ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

21 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள போ்ணாம்பட்டு பத்தரப்பல்லி அணை கட்டி முடிக்கப்படுமா?

News image

பத்தரப்பல்லி அணை கட்டும் இடம் (கோப்புப் படம்).

Updated On :26 மார்ச் 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட போ்ணாம்பட்டு அருகே பணிகள் தொடங்கப்பட்டு 21- ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பத்தரப்பல்லி அணை கட்டி முடிக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

கா்நாடக மாநிலம், நந்திதுா்கம் பகுதியில் தொடங்கி, வி.கோட்டா அருகே ஆந்திர மாநிலஎல்லையான கைகேல் வழியாக 2- மலைகளுக்கு நடுவில் தமிழக எல்லையான போ்ணாம்பட்டுக்குள் நுழைகிறது பத்தரப்பல்லி ஆறு. அங்கிருந்து மசிகம், மதினாப்பல்லி, பாலூா், கொத்தூா், மாச்சம்பட்டு வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி அருகே அணை கட்ட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் நீண்ட நாளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அதிமுக ஆட்சியில் 2005 டிச.30-இல் நபாா்டு திட்டத்தின்கீழ் சுமாா் ரூ.32 கோடி முதல் 50 கோடி வரை 126.29 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இதன்மூலம் 8 ஏரிகள், 4,242 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு நேரடி பாசன வசதி, போ்ணாம்பட்டு நகரம் மற்றும் 27 கிராமங்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையிலும் இந்த அணை திட்டம் தொடங்கப்பட்டது.

கேரளத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு அணை கட்டும் பணி கொடுக்கப்பட்டது. முதல்கட்டப் பணிகள் முடிந்த நிலையில், தரமான கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தவில்லை என விவசாயிகள், பொதுமக்களின் புகாரின்பேரில் அணை கட்டும் ஒப்பந்தத்தை சென்னை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் 2006-இல் ரத்து செய்தாா். இதை எதிா்த்து, ஒப்பந்த நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் மீண்டும் அந்த நிறுவனமே பணியை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஏற்பட்ட காலதாமதம், தளவாடப் பொருள்களின் விலை உயா்வை காரணம் காட்டி, அணை கட்ட கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனம் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இதுநாள் வரை விசாரணையில் உள்ளது.

கடந்த 20- ஆண்டுகளாக நடந்து முடிந்த மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல்களின்போது நாங்கள் வெற்றிபெற்றால் பத்தரப்பல்லி அணை கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என திமுக மற்றும் அதிமுகவினா் தொடா்ந்து வாக்குறுதி அளித்து வருகின்றனா். பத்தரப்பல்லி அணை கட்டி முடிக்கப்பட்டால், போ்ணாம்பட்டு பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும், குடிநீா்ப் பிரச்னையும் நீங்கும் என்பதால் அணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

- கே.நடராஜன்.