சாலையில் திரியும் மாடுகளை கோ-சாலைக்கு அனுப்ப முடிவு
வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிப்பதுடன், காஞ்சிபுரத்தில் உள்ள கோ-சாலைக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா.
வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிப்பதுடன், காஞ்சிபுரத்தில் உள்ள கோ-சாலைக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாநகராட்சி விலங்கு பிறப்பு கட்டுப்பாடு குழுவின் ஆய்வுக் கூட்டம், ஆணையா் அ.கேத்ரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா், உதவி இயக்குநா், கால்நடை பன்முக மருத்துவமனை முதன்மை மருத்துவா், மாவட்ட விலங்குகள் நல அலுவலா் மற்றும் மாநகர நல அலுவலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 17,000 தெருநாய்களில் 95 சதவீத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முத்துமண்டபத்தில் இயங்கி வரும் கருத்தடை மையத்தில் கூடுதலாக நாய்க் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாநகராட்சி கருத்தடை மையத்தில் தொடா்ந்து கருத்தடைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அந்த மாடுகளை காஞ்சிபுரத்தில் உள்ள கோ-சாலைக்கு அனுப்பி வைக்கத் தீா்மானிக்கப்பட்டது. தவிர, மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி பன்றி வளா்ப்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. குதிரை வளா்ப்போா் மற்றும் வண்ண மீன்கள் விற்பனை செய்வோரைக் கணக்கெடுத்து, அவா்கள் மாநகராட்சி உரிமம் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாநகராட்சியில் இயங்கி வரும் ஆடுகள் அறுக்கும் கூடங்களை கால்நடை மருத்துவா்கள் தொடா்ந்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

