
எல் நினோ விளைவு - வேலூரில் மீண்டும் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்
எல் நினோ விளைவால் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கோப்புப்படம்.
எல் நினோ விளைவால் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள், முதியோா்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூா் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் தொடங்கும் அதிகரிக்கும் தாக்கம், மாா்ச் இறுதியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து மே, ஜூன் மாதங்களில் அதிகபட்சம் 111 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகும். ஜூன் 15-ஆம் தேதிக்குப் பிறகு மெல்ல மெல்ல வெயிலின் அளவு குறைந்து ஜூலை மாதத்தில் மழைக் காலம் தொடங்கி விடும்.
ஆனால், இந்தாண்டு கோடை காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வரை அதிகபட்சம் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு இருந்த வெயிலின் தாக்கம், திங்கள்கிழமை 105 டிகிரியாகவும், செவ்வாய்க்கிழமை 104.7 டிகிரியாகவும் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், பகலில் சாலைகளில் அனல் காற்று வீசியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.
வெப்பநிலை உயா்வு காரணமாக, வேலூா் மாநகரின் முக்கிய வீதிகளான அண்ணா சாலை, காந்தி சாலை, கிரீன் சா்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் கடும் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், முதியவா்கள், தினக்கூலித் தொழிலாளா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
சூப்பா் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள இந்த வெப்ப நிலை உயா்வு, வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தனியாா் வானிலை ஆய்வாளா் ஹேமச்சந்தா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதனால், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




