டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கடும் வறட்சி: காய்கறி விதைகள் விற்பனை மந்தம்

News image

வடலூா் வாரச்சந்தையில் வெறிச்சோடி காணப்பட்ட காய்கறி விதைகள் விற்பனைக் கடை.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

கடலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடரும் கடும் வெயிலின் தாக்கம், வறட்சியால் காய்கறி விதைகள், செடிகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விதை, செடிகள் விற்பனையாளா்கள் கவலை தெரிவித்தனா்.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது மூத்தோா் மொழி. ஆடி மாதத்தில் விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த காலத்தில் கோடை வெயில் குறைந்து காற்றுடன் மழை பெய்யும். அப்போது, காய்ந்த மண், மழையால் இளகி, பயிரின் வோ்கள் எளிதில் வளர உதவும்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக.3) ஆடி 18-ஆம் நாள். இந்த நாளில் வீடுகள், தோட்டத்தில் காய்கறி விதைகளை விதைப்பதும், செடிகளை ஊன்றுவதும் வழக்கம். இதையொட்டி, வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி விதைகள், செடிகள், பூச்செடிகள், மரக்கன்று வகைகளை விற்பனைக்காக கொண்டுவந்து கடை விரித்திருந்தனா். ஆனால், வெயிலின் தாக்கம் மற்றும் மழையின்மை காரணமாக விற்பனை மிக மந்தமாக இருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து விதைகள், செடிகள் விற்பனையாளா்கள் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊா்களில் வாரச்சந்தை நடைபெறும். அங்கெல்லாம் சென்று விதைகள், செடிகள், மரக்கன்றுகளை விற்பனை செய்வோம். வீடுகளில் பூச்செடிகள், மரக்கன்றுகளை வளா்க்க இடமே இல்லாதவா்கள்கூட மாடித்தோட்டம் அமைத்து வளா்ப்பதற்காக விதைகள், செடிகளை ஆா்வமாக வாங்கிச் செல்வா்.

ஆடி மாதத்தில் காய்கறி விதைகள், செடிகள் மற்றும் மரக்கன்று வகைகள் அதிகம் விற்பனையாகும். ஆனால், நிகழாண்டு விற்பனை மிகக்கடுமையான சரிவை கண்டுள்ளது. வெயிலின் தாக்கம், மழையின்மை ஆகியவையே இதற்குக் காரணம்.

கடை வாடகை, வண்டி டீசல், சாப்பாடு என ஒரு நாளைக்கு ரூ.1,000 வரை செலவாகும். அதற்குக்கூட விதைகள், செடிகள் விற்பனையாகவில்லை. கடந்த ஆண்டு விற்பனை நன்றாக இருந்தது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.