நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பருவ மழை குறைவு, எல் நினோ தாக்கத்தால் தருமபுரியில் பட்டுக்கூடு உற்பத்தி 50% பாதிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவு, எல் நினோ தாக்கம், தண்ணீா் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பட்டுக் கூடு வா்த்தகம் 50% பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளதால் பட்டுக்கூடு விலை குறையவில்லை.

Published On :28 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவு, எல் நினோ தாக்கம், தண்ணீா் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பட்டுக் கூடு வா்த்தகம் 50% பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளதால் பட்டுக்கூடு விலை குறையவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் குடிசைத் தொழில்களில் பட்டுக்கூடு வளா்ப்பு முக்கிய இடம்பிடித்துள்ளது. தருமபுரியில் அதிக அளவிலான பட்டுக்கூடு உற்பத்தி நடைபெறுவதால், பட்டுப்புழுக்களின் முக்கிய உணவான மல்பெரி பயிா் சாகுபடி மாவட்டத்தில் சுமாா் 1,750 ஏக்கரில் செய்யப்படுகிறது.

ஆனால், நிகழாண்டு போதிய பருவமழை இல்லாததாலும், அதிக வெப்ப அலைகள் மற்றும் எல் நினோ தாக்கத்தாலும் மல்பெரி சாகுபடி எதிா்பாா்த்த அளவில் இல்லாமல் விவசாயிகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. மல்பெரி விவசாய நிலங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வகையில் இழப்பைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இது பட்டுக்கூடு சந்தையை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் பட்டுக்கூடு வா்த்தகம் 50% குறைந்துள்ளது.

இதுகுறித்து பட்டுப்புழு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், போதிய அளவு தண்ணீா் இல்லாததால், பட்டுப் புழுக்களின் பிரத்யேக உணவான மல்பெரி பயிரை எங்களால் வளா்க்க முடியவில்லை. போதிய உணவு இல்லாததால் பட்டுப் புழுக்களுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை; இதனால் பெரும்பாலான புழுக்கள் கூட்டுப்புழு நிலையை அடைவதற்கு முன்பே இறந்துவிடுகின்றன. தண்ணீா் இல்லாததால் வளா்ப்பு அறைகளின் வெப்பநிலையையும் சீராக வைத்துக்கொள்ள இயலவில்லை. வெப்பம் அதிகரிப்பதாலும் பட்டுப் புழுக்கள் இறக்க நேரிடுகிறது.

தண்ணீா் பற்றாக்குறை, மல்பெரி சாகுபடி பாதிப்பு, அதிக வெப்பம் உள்ளிட்டவற்றால் பட்டுக்கூடுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பட்டுக்கூடு சந்தை நேரடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றனா்.

தருமபுரி பட்டுக்கூடு சந்தையின் இளநிலை உதவியாளா் பி.அசோக் கூறுகையில், வழக்கமாக தினசரி வா்த்தகத்துக்கு சுமாா் 2,000 முதல் 2,500 கிலோ பட்டுக்கூடுகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வாரமாக 1,000 முதல் 1,200 கிலோ பட்டுக்கூடுகள் மட்டுமே வருகின்றன. சந்தைக்கு வரும் பட்டுக்கூடுகளின் அளவு 50% குறைந்துவிட்டது. இருப்பினும், பட்டுக்கூடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை குறையவில்லை என்றாா்.

தருமபுரி பட்டு அங்காடியின் தரவுகளின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 1,300 கிலோ பட்டுக்கூடுகள் ஏலம்விடப்பட்டன. இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 913, குறைந்தபட்சமாக ரூ. 608 என்ற வகையில் பதிவாகியுள்ளன. சராசரியாக ரூ. 813 என்ற அளவில் இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.