நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிராமப் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் ஆடு வளர்ப்பு தொழில்

வெள்ளக்கோவில், ஜன.10: குறைந்த முதலீட்டில், நிரந்தர வேலைவாய்ப்பளித்து கிராமப்புற பொருளாதாரத்துக்கு ஆடு வளர்ப்புத் தொழில் புத்துயிரூட்டி வருகிறது.  சம்பளத்துக்காக வேலைக்குப் போகாமல், கிராமப்புறங்களில் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:43 am

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில், ஜன.10: குறைந்த முதலீட்டில், நிரந்தர வேலைவாய்ப்பளித்து கிராமப்புற பொருளாதாரத்துக்கு ஆடு வளர்ப்புத் தொழில் புத்துயிரூட்டி வருகிறது.

 சம்பளத்துக்காக வேலைக்குப் போகாமல், கிராமப்புறங்களில் சுய தொழிலாக பலர் செம்மறி ஆடு, வெள்ளாடுகளை வளர்த்து வருமானத்தைப் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 55 லட்சத்து 93ஆயிரம் செம்மறி ஆடுகளும், 81 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளாடுகளும் உள்ளன.

ஆடுகள் இறைச்சிக்காகவும்,தோல் உற்பத்திக்காகவும்,சில வகை இனங்கள் உரோமத்துக்காகவும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டு மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செம்மறி ஆடுகளில் குறும்பாடு,மலபாரி,மேச்சேரி,வேம்பார்,திருச்சி கருப்பு,சென்னை சிவப்பு,ராமநாதபுரம் வெள்ளை இனங்கள் உள்ளன. அந்தந்தப் பகுதியின் தட்ப வெப்ப நிலை, மேய்ச்சல், விற்பனை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, தகுந்த இனத்தை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்.

  தமிழ்நாட்டில் பெரும்பாலான வறட்சியான மாவட்டங்களில் மேச்சேரி இனம் வளர்க்கப்படுகிறது. இரண்டு குட்டிகள் போடும் ஆடுகளின் வம்சத்திலிருந்து வளர்ப்பு ஆடுகளைத் தேர்ந்தெடுத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 80 சதவீத ஆடுகள் மழைக் காலத்திலும், 20 சதவீத ஆடுகள் கோடை காலத்திலும் பருவ நிலையை அடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன.

 தரமான உள்நாட்டு இன கிடாக்களை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.சினைக்காலம் சராசரியாக ஐந்து மாதங்களாகும். நான்கு மாத குட்டி 15-20 கிலோ எடை அளவுக்கு வளர்ந்து, இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. வளர்ப்பதற்கு தேவைப்படும் பெட்டை குட்டிகள் 18 மாதங்களுக்கு முன்பாகவே முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கத்துக்கு தயாராகின்றன.

 தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளில் பள்ள ஆடு,சேலம் கருப்பு,கன்னி ஆடு,கொடி ஆடு,சாணன் போன்ற இறைச்சிóக்கான இனங்கள் காணப்படுகின்றன. தினமும் இரண்டு லிட்டர் வரை பால் தரக்கூடிய ஜமுனாபாரி, தலைச்சேரி இனங்களும் ஆங்காங்கே உள்ளன. இனப்பெருக்கத்துக்கு அதிக உற்பத்தித் திறன் கொண்ட,பெட்டை ஆடு மற்றும் கிடாக்களை அவற்றின் பாரம்பரியத்தைக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். வெள்ளாடுகள் இரண்டு வருடத்தில், மூன்று முறை தலா மூன்று குட்டிகள் வரை ஈனும். குட்டிகளும் இறைச்சிக்காக நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

   பொதுவாக ஆடுகளை திறந்த வெளியில் இடம்விட்டு, இடம் மாற்றக்கூடிய வகையில் பட்டிகள் அமைத்து இரவு நேரத்தில் தங்க வைப்பது சிறந்தது. வெள்ளாடுகளுக்கு நல்ல முறையில் அமைக்கப்பட்ட கொட்டகையையும் பயன்படுத்தலாம். சாதாரணமாக கிடைக்கும் மேய்ச்சல் வகைகளே போதுமானது. தேவைப்பட்டால் கோதுமை தவிடு, அரிசி தவிடு, கடலைப் புண்ணாக்கு,மக்காச்சோளம்,சோளம்,கொள்ளு, நரிப்பயிறு போன்ற சத்துணவுகளை கொடுக்கலாம்.

 வறட்சியான காலங்களில் உணவுப் பற்றாக்குறையைப் போக்க,இக்காலத்திலும் பசுமையாக வளரும் வேலமரம்,வேம்பு,கொடுக்காப்புளி,பூவரசு,அத்தி மரம்,ஆலமரம்,இலந்தை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மரவகைகளின் இலைகளை கொடுக்கலாம்.

 காராமணி,சணப்பு,முயல்மசால்,வேலிமசால் தீவன பயிர்களும்,கம்பு,பாராப்புல்,கினியாப்புல் போன்ற புல் வகைகளும் உணவாகப் பயன்படுகின்றன. ஆடுகளுக்கு கொசு,உனி,அசுவினி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பெருமளவு நோய்த் தாக்குதலை சுகாதாரமான பராமரிப்பு மற்றும் குடற்புழு நீக்கம் மூலம் கட்டுப்படுத்தலாம்.

  தொண்டை அடைப்பான்,பிபிஆர்,ஆட்டம்மை,துள்ளுமாரி,கோமாரி நோய்களுக்கு தடுப்பூசியும்,நீலநாக்கு நோய்க்கு தகுந்த சிகிச்சையும் அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறைகளை தயங்காமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயம் சார்ந்த துணைத் தொழிலாக ஆடு வளர்ப்புத் தொழில்,கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.