திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பரிதவிப்பில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்!

ஈரோடு, நவ. 1: இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து 5 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால் முதல் ஆண்டு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ளவ

Updated On :20 செப்டம்பர் 2012, 2:53 pm

ஈரோடு, நவ. 1: இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து 5 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால் முதல் ஆண்டு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ளவும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமலும் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 700 இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் படித்துவருகின்றனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக கட்டுப்பாட்டில் இந்நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு பயிற்றுவிக்கப்படும் 2 ஆண்டு பட்டயப் படிப்பில் முதல் ஆண்டில் 7 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 7 பாடங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.  அரசு தேர்வுகள் துறை இத் தேர்வுகளை நடத்துகிறது.

கடந்த கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 2-ம் தேதியும், முதல் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதியும் தொடங்கி, மாத இறுதிக்குள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கி மாத இறுதிக்குள் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு முடிந்து 5 மாதங்கள், விடைத்தாள் திருத்தி 4 மாதங்களும் முடிந்துள்ளன. ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி 5 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இன்னும் 6 மாதங்களில் இப் பாடங்களுக்கான தேர்வுகள் வந்துவிடும். தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், முதல் ஆண்டில் தேர்ச்சிபெறாத பாடங்களை மீண்டும் 2-ம் ஆண்டில் எழுதுவதற்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள உரிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தும் அரசு தேர்வுகள் துறைதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் தேர்வை நடத்துகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 1 மாதத்தில் வெளியிடும் இத்துறை, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகளை 5 மாதங்கள் முடிந்தும் வெளியிடவில்லை.  இதனால் இந்த மாணவர்கள் இந்த தேர்வுத்துறை மீது நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தது: கடந்த ஆண்டில் பெரும்பான்மையான நிறுவனங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.  இதனால் தேர்ச்சிபெறாத பாடங்களை இந்த ஆண்டு மீண்டும் எழுதினாலும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெறுவது மிகவும் கடினம். இதனால் இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் சதவீதம் இந்த ஆண்டு மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிஎட் கல்வியைப் பொறுத்தவரை, பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடத்துவது

உள்ளிட்ட அனைத்தும் கல்வியியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பிஎட் தேர்வுகளுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இடைநிலை ஆசிரியர் பயிற்சியைப் பொறுத்தமட்டில், பயிற்சி அளிக்க ஒரு துறை, தேர்வு நடத்துவது மற்றொரு துறை என்ற நிலை உள்ளது.  

ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எதிர்காலம் கருதி தேர்வு நடத்தப்படுவது குறித்தும், தேர்வு முடிவுகளை வெளியிடும் காலம் குறித்தும் அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடவேண்டும். இதுபோல் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சிபெறாதவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் முதல் ஆண்டு மாணவர்கள் தேர்ச்சிபெறாத பாடங்களை உடனடியாக எழுதுவதற்கும், தேர்ச்சி பெறாத இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வுக்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்கும் நிலையும் மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.