கலங்கி நிற்குது கட்டுமானத் தொழில்! இலவச வீடு வழங்கும் திட்டம் காரணமா
ஈரோடு, அக். 5: அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தை காரணம் காட்டி, கட்டுமானப் பொருட்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து இத்தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சரிவை சந்தித்திருந்த கட்டுமானத்துறை தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் அரளை கல் (கருங்கல்), செங்கல் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிப்படையவும், வீடுகளின் விலை உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரளை கல்லை பொறுத்தவரை ஒரு கல்ரூ. 4 க்கு விற்கப்பட்டது தற்போதுரூ. 10 முதல்ரூ. 15 வரை விற்கப்படுகிறது. இந்த கல்லை ஏற்ற குவாரிகளில் 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுóள்ளது. ஒரு லோடு அளவு கொண்ட 3,000 செங்கல்ரூ. 12 ஆயிரம் என்றிருந்த நிலையில் தற்போதுரூ. 18 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரூ. 4-க்கு விற்ற ஒரு செங்கல், ஒரே மாதத்தில் ரூ. 6-க்கு மேல் சென்றுவிட்டது. வடகிழக்குப் பருவமழை துவங்கி விட்டால் விலை இன்னும் உயரலாம் என கூறப்படுகிறது.
இதுபோல் சிமெண்ட் விலை கடந்த 10 நாட்களில் 100 சதம் உயர்ந்துள்ளது. ரூ. 145 முதல்ரூ. 160 வரை விற்கப்பட்ட 50 கிலோ கொண்ட சிமெண்ட் மூட்டை, தற்போதுரூ. 280 முதல்ரூ. 290 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு, கட்டுமானத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. அதோடு, செயற்கையான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் விலையும் ஒரு சதுரடிக்குரூ. 100 வரையில் உயர்ந்துள்ளது. இது தவிர கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விலையும் டன்னிற்குரூ. 3,000 வரையில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: செங்கலை பொறுத்தவரையில் மழை பெய்து உற்பத்தி குறைந்துள்ளதாக
கூறப்பட்டாலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு வழங்குவதாகக் கூறி முடக்கப்படுகிறது. இதனால் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் முழுமையாக முடங்கிவிட்டது. நடுத்தர வருவாய் பிரிவினரின் புதிய வீடு கட்டும் கனவு கானல் நீராகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடித்துக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கட்டடப் பொறியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் இத்தொழிலை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ளதை போன்றே சிமெண்ட் விலை உயர்வு ஏற்பட்டபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சிமெண்ட் மொத்தமாக தேவைப்படுவோருக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் உரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுத்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சிமெண்ட் கிடைத்தது. தொடர்ந்து சிமெண்ட் வரவழைப்பதில் ஏற்பட்ட சிக்கல், விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதம் போன்றவற்றால் அந்தத் திட்டம் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க இத் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தது: செங்கல் தயாரிக்க உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைக்காததால், வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரும் சூளை உரிமையாளர்கள், அவர்களுக்கு முன்பணம் அளித்து குடும்பத்துடன் தங்கியிருக்க இடமும் கொடுத்து, பணி வழங்குகின்றனர். ஆனால், சில பிரச்னைகள் எழும்போது பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதுடன் உற்பத்தியும் குறைகிறது. மேலும், இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் செங்கல் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கண்டிப்பான உத்தரவினை அளித்துள்ளது. இக் காரணங்களினால் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
