டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கோரா பட்டுத் தொழிலில் புதிய நெருக்கடி

உடுமலை, செப். 19: கோரா பட்டுத் தொழிலுக்கு தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷உடுமலை மற்றும் பழனி வட்டத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:53 pm

வி.கே. ராஜமா​ணிக்கம்

உடுமலை, செப். 19: கோரா பட்டுத் தொழிலுக்கு தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

÷உடுமலை மற்றும் பழனி வட்டத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள், குடும்பம், குடும்பமாக கைத்தறி நெசவுத் தொழிலில் ஆ ண்டாண்டு காலமாக ஈடுபட்டு வந்தனர். காலப்போக்கில் நவீன டிசைன்களுடன் மார்க்கெட்டுக்கு வந்த சேலைகளுடன் போட்டியிட முடியாமல் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் திருப்பூர், பல்லடம், சோமனூர் ஆகிய ஊர்களுக்கு குடிபெயர்ந்தன.

÷இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன், மிகக் குறைந்த விலையில் தயாரிக் கப்படும் "கோரா பட்டு' என்ற புதிய ரக பட்டுச் சேலைகள் ஏழை, எளிய  மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தன. இந்த கோரா பட்டுச் சேலைகள் காஷ்மீர், ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் குறிப்பாக உடுமலை, பழனி வட்டத்தில் தயாரிக்க சூழ்நிலைகள் ஒத்து வந்தன.

÷இதற்கான நூல் சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு தருவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் | 750 முதல் அதிக பட்சம் | 2 ஆயிரத்திற்குள் அழகிய பட்டுச் சேலைகளைத் தயாரிக்க முடிந்ததால், ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே கோரா பட்டுச் சேலைகள் நல்ல முறையில் விற்பனையாகி வந்தன.

÷இதனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது. அதைத் தொடர்ந்து, பிழைப்புக்காக வெளியூர் சென்ற கைத்தறி நெசவாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பினர்.

÷கோரா பட்டுச் சேலைகளுக்கான நூல் சீனாவில் இருந்து இறக்குமதியாகி வந்த நிலையில், அந்த நாடு திடீரென அதன்மீது வரியை தாறுமாறாக உயர்த்தி விட்டது. இதனால் ஒரு கிலோ கோரா பட்டு நூல் கடந்த சில மாதங்களில் மட்டும் | 1,700ல் இருந்து | 2,800 வரை உயர்ந்து விட்டது. மேலும் மத்திய அரசின் தற்போதைய பஞ்சு ஏற்றுமதிக் கொள்கையால் நூல் விலையும் பல மடங்கு ஏறி விட்டது. 

÷இதனால் கோரா பட்டுச் சேலைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் நிலை பரிதாபமாகிவிட்டது. கோரா பட்டுத் தொழிலில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கோரா பட்டுச் சேலை தயாரிப்பாளர்கள் சனிக்கிழமை கூறியது:

÷கோரா பட்டுச் சேலைகளுக்கு கச்சாப்பொருட்கள் உள்நாட்டில் கிடைப்பதில்லை; சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களில் நூல் விலை கிலோ ஒன்றுக்கு | ஆயிரம் வரை ஏறி விட்டது. உள்ளூரிலும் நூல் விலை ஏறி விட்டது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், மார்க்கெட்டில் பெரிய வியாபாரிகள் சேலைகளுக்கு விலையை உயர்த்த மறுத்து வருகின்றனர்.

÷ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கோரா பட்டுச் சேலைகளை வாங்குவதால் அதன் விலையை ஏற்ற முடிவதில்லை; விலையை உயர்த்தினால், காஞ்சிபுரம், பனாரஸ் போன்ற ரகங்களுக்கே பெண்கள் மாறி விடுகிறார்கள்.

÷இதனால் சேலை தயாரிப்பு விலை அதிகரித்தும், எங்களுக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைத்து விற்று வருகிறோம். இந்தத் தொழிலில் தற்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றனர்.

÷இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியது: கச்சாப்பொருள் விலையேற்றம், நூல் விலையேற்றம், மார்க்கெட்டில் கோரா பட்டுச் சேலையின் விலை குறித்த விபரமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு ஒரு நாள் கூலியாக | 275 கொடுக்கின்றனர். ஒரு சேலை நெய்து முடிக்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிறது. இதற்காக எங்களது மொத்தக் குடும்பமும் பாடுபட வேண்டியுள்ளது.

÷இது எங்களுக்கு கட்டுபடியாகாது. இந்நிலை நீடித்தால் மீண்டும் நாங்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை உருவாகி விடும். எங்களது கூலியை உயர்த்தவும், தொழிலாளர் நல வாரியம் மூலம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை கிடைக்கச் செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

÷பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள கோரா பட்டுச்சேலை நெசவுத்தொழில் தற்போது சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். இதுவே இவர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.