கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருப்பத்தை ஏற்படுத்திய தமிழக இடைத்தேர்தல்கள்!

பொதுத் தேர்தல்கள் மாற்றத்தை ஏற்படுத்துவது போல, சில இடைத்தேர்தல்களும் மாற்றத்துக்கு வழிகோலிய சரித்திரம் உண்டு. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி அடைவதுதான் வழக்கம். இடைத்தேர்தல் வந்தாலே முத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:50 am

விக்கிரமசிங்கன்

பொதுத் தேர்தல்கள் மாற்றத்தை ஏற்படுத்துவது போல, சில இடைத்தேர்தல்களும் மாற்றத்துக்கு வழிகோலிய சரித்திரம் உண்டு. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி அடைவதுதான் வழக்கம். இடைத்தேர்தல் வந்தாலே முதலமைச்சரைத் தவிர ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் அங்கே வந்து குவிந்து விடுவதும், ஆளும்கட்சியின் வெற்றியை எப்பாடு பட்டாவது உறுதிப்படுத்துவதும் வழக்கம்.

÷மக்களும் சரி, இடைத்தேர்தல் வெற்றி தோல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்பதாலும், குறிப்பாக, ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை என்பதால், ஆளும் கட்சியை ஆதரிப்பதுதான் வழக்கம். ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் தொகுதியில் அரசின் நலத் திட்டங்கள் தடங்கலின்றிச் செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.

÷இந்தப் பொது நியதியையும் மீறி, இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுகிறது என்றால் ஆளும் கட்சியின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் மக்களுக்கு அளவு கடந்த அதிருப்தி இருப்பதைத்தான் அது தெளிவாக்குகிறது. ஆளும்கட்சியின் பண பலமும், அதிகார பலமும், மக்களின் வெறுப்புக்கும் அதிருப்திக்கும் முன்னால் தூள்தூளாகி விடுவதைப் பல இடைத்தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. இடைத்தேர்தல் தோல்வி என்பது ஆளும் கட்சிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி என்பதுதான் உண்மை.

÷ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் (மெட்றாஸ் பிரசிடென்சி) இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட முதல் சட்டப்பேரவையில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி அப்போது குற்றாலத்தில் "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு "மைனாரிட்டி' அரசுக்குத் தலைமை தாங்கி நடத்தும் சாதுர்யம் ராஜாஜிக்குத்தான் உண்டு என்று அன்றைய ஆளுநர் ஸ்ரீபிரகாசாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜும் நம்பினார்கள்.

÷காமராஜ் நேரில் குற்றாலம் சென்று ராஜாஜியிடம் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படியும், இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நிரந்தரமாகக் காங்கிரஸ் பின்னடைவைச் சந்திக்க நேரும் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராஜாஜி ஒரு நிபந்தனையுடன் பிரதமராக (அப்போது முதல்வர்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டனர்) சம்மதித்தார். ராஜாஜி விதித்த நிபந்தனை "இந்தியாவில் முதல் குடிமகனாக இருந்த நான் இனிமேல் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை!' என்பதுதான்.

÷ராஜாஜி பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டதும், "மைனாரிட்டி' அரசு "மெஜாரிட்டி' அரசாக மாறியது தனிக்கதை. 1954-ல் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்துக்கு எழுந்த பரவலான எதிர்ப்பு அவரைப் பதவி விலக வைத்தது. காமராஜ் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் சட்டப்பேரவை உறுப்பினாரக இல்லை. ராஜாஜியைப் போல, தான் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை காமராஜ் விரும்பவில்லை.

÷அப்போது, குடியாத்தம் இரட்டைத் தொகுதியாக இருந்தது. அந்த நேரத்தில் குடியாத்தம் தொகுதி உறுப்பினர்களாக இருந்த ஏ.ஜே. அருணாசலம், ஏ.எம். ரத்தினசுவாமி (தனி) இருவரின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட இருந்தது. விருதுநகரைச் சேர்ந்த பிரதமர் காமராஜ், தனது ஜாதி வாக்குகளே இல்லாத வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தபோது விபரீதத்தை விலைக்கு வாங்குகிறார் காமராஜ் என்று அவரது கட்சிக்காரர்களே விமர்சித்தனர்.

÷குடியாத்தத்தில் எப்படியும் காமராஜைத் தோற்கடித்தே தீருவது என்று இடதுசாரிகள் கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அண்ணாதுரை உள்ளிட்ட திமுகவினரும் அதுவரை ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைக் காரணம் காட்டிக் காமராஜை மாற்று அரசு அமைக்கக் கோரியவர்கள், அவருக்கு எதிராகக் களமிறங்கியதைப் பார்க்க சகிக்காத பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காமராஜுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

÷தனக்கு சம்பந்தமே இல்லாத குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காமராஜ் வெற்றிவாகை சூடினார் என்பது மட்டுமல்ல, அந்த வெற்றிதான் அவரது தலைமைக்கு வலு சேர்ப்பதாகவும் அமைந்தது. தமிழக சரித்திரத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய இடைத்தேர்தல்களில் குடியாத்தம் இடைத்தேர்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.

÷மூன்றாவது சட்டப்பேரவை மார்ச் 1962-ல் அமைந்தது. முந்தைய சட்டப்பேரவையில் 15 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் பேரவையில் 50 உறுப்பினர்களுடன்  எதிர்க்கட்சியாக வந்தமர்ந்தது. காங்கிரஸýக்கு எதிரான உணர்வுக்குப் பொதுத்தேர்தல் முடிவு அச்சாரம் போட்டது என்றால், தொடர்ந்து நடந்த திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அதை உறுதி செய்தது.

÷1962 பொதுத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி. சுப்பராயனின் மறைவைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இடைத்தேர்தலில், பி. சுப்பராயனிடம் தோல்வியடைந்த திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் செ. கந்தப்பன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் செங்கோடக் கவுண்டரைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாடு தழுவிய அதிர்ச்சி அலையை எழுப்பியது.

÷1959-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் சண்டௌலியில் நடந்த இடைத்தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்ததற்குப் பிறகு காங்கிரஸ் எதிர்கொண்ட இடைத்தேர்தல் தோல்வி இதுதான். தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ப.உ. சண்முகம் வெற்றி பெற்றபோது, காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உறைந்தது.

÷திருச்செங்கோடு, திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடைத்தேர்தல் தோல்விகள்தான் முதல்வர் காமராஜுக்கு, காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகிக் "காமராஜ் பிளான்' என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். காங்கிரஸின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தவை திருச்செங்கோடு, திருவண்ணாமலை இடைத்தேர்தல்கள்தான்.

÷1967-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. அந்தத் தேர்தலில் காமராஜ், பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். அப்படிப்பட்ட சூழலில், 1969-ல் நேசமணியின் மறைவைத் தொடர்ந்து நாகர்கோயில் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜ் போட்டியிட்டார்.

÷காமராஜுக்கு எதிராகத் திமுக கூட்டணியின் சார்பில் சுதந்திராக் கட்சி வேட்பாளர் டாக்டர் மத்தியாஸ் நிறுத்தப்பட்டார். முதல்வர் அண்ணாதுரையைத் தவிர, அன்றைய திமுக அமைச்சரவையே நாகர்கோவிலில் முகாமிட்டு எப்படியும் காமராஜைத் தோற்கடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தது. இடைத்தேர்தல் என்பதால் முதல்வர் அண்ணாதுரை பிரசாரத்துக்கு வரவில்லை. எம்.ஜி.ஆரும் பிரசாரத்துக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

÷62% வாக்குகளுடன் காமராஜ் நாகர்கோயிலில் அமோக வெற்றி பெற்றார். நாகர்கோயில் இடைத்தேர்தல் வெற்றி தமிழகத்தில் காங்கிரஸýக்குப் புதிய உத்வேகத்தை அளித்ததுடன்  திமுகவின் செல்வாக்குச் சரிவையும் உணர்த்தியது. காங்கிரஸ் பிளவுபடாமல் ஒன்றுபட்ட காங்கிரசாகத் தொடர்ந்திருக்குமேயானால், ஒருவேளை, காங்கிரஸ் அடுத்த தேர்தலில் மீண்டும் பதவியைப் பிடித்திருக்கவும் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.