வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேருந்துக் கட்டண உயர்வு: கோவை கோட்டத்தில் தினசரி கூடுதல் வசூல் ரூ. 1 கோடி!

கோவை, டிச. 4: பேருந்துக் கட்டண உயர்வு மூலமாக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தினமும் கூடுதலாக ரூ. 1 கோடி வசூலாவதாகத் தெரியவந்துள்ளது. கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில், கோவை, திருப்பூ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:55 pm

கே.கே.மணிகண்டன்

கோவை, டிச. 4: பேருந்துக் கட்டண உயர்வு மூலமாக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தினமும் கூடுதலாக ரூ. 1 கோடி வசூலாவதாகத் தெரியவந்துள்ளது.

கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மண்டலங்கள் உள்ளன. நகரப் பேருந்துகள், புறநகர் பேருந்துகளுமாக, கோவை மண்டலத்தில் 1,500 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்தில் 700 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்தில் 800 பேருந்துகளும் என, 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துக் கட்டண உயர்வு மூலமாக, தினசரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.

கட்டண உயர்வுக்கு முன், கோவை கோட்டத்தில் உள்ள 3 மண்டலங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மூலமாக தினமும் ரூ. 1.70 கோடி வசூலானதாகவும், கட்டண உயர்வை அடுத்து தினசரி ரூ. 1 கோடி கூடுதல் வசூலாவதாகவும் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மண்டலத்தில் கூடுதலாக ரூ. 35 லட்சம், திருப்பூர் மண்டலத்தில் ரூ. 30 லட்சம், ஈரோடு மண்டலத்தில் ரூ. 35 லட்சம் வரையிலும் தினசரி கூடுதலாக வசூல் ஆவதாகத் தெரிகிறது.

  இருப்பினும், கட்டண உயர்வு மூலமாக கோவை கோட்டத்தில் 70 சதவீதம் கூடுதல் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 45-50 சதவீதம் மட்டுமே கூடுதலாக வசூலாகிறது.

கட்டண உயர்வு காரணமாக பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் பலரும், தற்போது ரயில்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. அதேசமயம், ரயில்களில் தினசரி வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருச்சி ரயில் நிலையத்தில் மட்டுமே தினமும் ரூ. 4 லட்சம் கூடுதல் வசூலாவதாகத் தெரிகிறது.

பஸ் கட்டண உயர்வால், ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தேவைக்காக வெளியூர்களுக்குப் பயணிக்கின்றனர்.

  இதுபோன்ற காரணங்களால், அரசு போக்குவரத்துக்கழகம் எதிர்பார்த்த கூடுதல் வசூலில் 20 சதவீதம் குறைந்திருப்பதாக அரசு போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலைப் பிரதேசங்களில் வருவாய் சரிவு: மலைப் பிரதேசமான வால்பாறையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இக்கிளையில் தினசரி ரூ. 24 ஆயிரம் வசூல் ஆன நிலையில், தற்போது தினசரி வசூல் ரூ. 17 ஆயிரமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக, அப்பகுதி மக்களில் பலரும், குறிப்பிட்ட இடங்களுக்கு பஸ்களில் பயணிக்காமல் நடந்து செல்வதாகவும், வேன் உள்ளிட்ட பிற வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.

வழக்கமாக, நீலகிரி, வால்பாறை மலைப்பிரதேசங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கு செலவு அதிகம், வருவாய் குறைவு என்ற நிலைதான் உள்ளது. தற்போதைய கட்டணவு உயர்வு மூலமாக வருவாய் இழப்பு சற்றே குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

  இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்ட நிர்வாக இயக்குநர்  பி.பி.ராஜேந்திரனிடம் கேட்டபோது, "பேருந்துக் கட்டண உயர்வு மூலமாக தினசரி ரூ. 1 கோடி கூடுதலாக வசூலாகிறது என்பது அனைத்து நாள்களுக்கும் பொருந்தாது. ஒருசில நாள்களில் கூடுதல் வருவாய் ரூ. 75 லட்சமாக இருக்கலாம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.