ஈரோடு, பிப். 8: கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலை ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்ற மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ரயில்வே வாரியம் அலட்சியப்படுத்துகிறது.
கோவையிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் திருப்பதிக்கு, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் விரைவு ரயில் இயக்கம் துவங்கியது. இந்த ரயில் சேலம், காட்பாடி, திருப்பதி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது.
திருப்பூர், ஈரோட்டில் இருந்து தினமும் 500-க்கு மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி செல்கின்றனர். ஈரோடு மாவட்ட பக்தர்களுக்காக ஸ்ரீவாரி சேவா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் மற்றும் இதர வசதிகள் முன்பதிவு செய்யப்படுகிறது.
திருப்பதி செல்லும் ஈரோடு மாவட்ட பக்தர்கள் தற்போது காட்பாடி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து திருப்பதிக்கு வேறு ரயில் மாறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, திருப்பதிக்கு ரயில் விட வேண்டுமென நீண்டகாலமாக மக்கள் போராடி வந்தனர்.
ஆனால், தற்போது இயக்கப்படும் திருப்பதி ரயில், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவில்லை. இதனால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
÷திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ரயிலை நிறுத்தக் கோரி, காங்கிரஸ், வணிகர் சங்கம், ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர் எம்.பி.க்களும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ரயில்வே அமைச்சர் மம்தாவுக்கு, திருப்பூர் எம்.பி. சிவசாமி எழுதியுள்ள கடிதத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பின்னலாடை ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டித் தரும் நகரம் திருப்பூர். ஈரோடு ரயில் நிலையம் மிகப் பெரிய சந்திப்பாக உள்ளது. இங்கு, ஜவுளி மற்றும் மஞ்சள் வணிகம் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த இரு ரயில் நிலையங்களிலும் கோவை- திருப்பதி ரயில் நிற்காமல் செல்வது கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு எம்.பி. அ.கணேசமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளர் தீபக் கிரீசன், ரயில்வே அமைச்சர் மம்தாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கடிதம் அனுப்பினார். அவருக்கு, தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய பதில் கடிதத்தில், திருப்பதி ரயில், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்ல தென்னக ரயில்வே சார்பில் பரிந்துரை செய்வதுடன், விரைவில் அதற்கான உத்தரவைப் பெற்று, நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும் பலனில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கமும் (அதிமுக), இந்தக் கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
÷ஈரோடு ஸ்ரீவாரி சேவா அறக்கட்டளையில் நாள்தோறும் 300 பேர் வரை முன்பதிவு செய்து, திருப்பதி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அறக்கட்டளையும் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் பலமுறை வலியுறுத்தியும், கோவை- திருப்பதி ரயிலை ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்துவது குறித்து இதுவரை எந்த பதிலையும் அளிக்காமல் இருப்பது, மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ரயில்வே துறை அலட்சியப்படுத்துவதையே காட்டுகிறது. ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயிலை நிறுத்துவதன் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்குமே தவிர, இழப்பு ஏற்படாது. இதனை ரயில்வே துறை உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.