வால்பாறை, ஜன. 8: வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதால், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை எஸ்டேட்டில் ரோட்டோரப் பகுதிகளில் பல இடங்களில் அப்பகுதியைச் சார்ந்த பக்தர்கள் சாமி சிலைகளை மரங்களுக்குக் கீழும், சிறிய கட்டடம் கட்டி வைத்தும் வழிபட்டு வருகின்றனர்.
வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த முனீஸ்வர சாமி சிலை, அய்யர்பாடி எஸ்டேட்டில் உள்ள வனபத்திரகாளியம்மன் சிலை, வாட்டர்பால் எஸ்டேட்டில் உள்ள செல்வவிநாயகர் சிலை, நாகசிற்ப சிலை உள்ளிட்ட சிலைகள், சனிக்கிழமை காலை அகற்றப்பட்டு, உடைந்த நிலையில் வேறு இடங்களில் கிடந்தன.
இதைக் கண்ட அப்பகுதியினர் வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை ஏ.டி.எஸ்.பி ஜெயபாண்டியன், வால்பாறை டி.எஸ்.பி. பழனிசாமி, ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்தனர்.
ஏ.டி.எஸ்.பி. ஜெயபாண்டியன் கூறுகையில், கலவரத்தைத் தூண்டுவதற்காகவே சிலர் இம்மாதிரியான சமபவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றும் கூறினார்.