பெ.நா.பாளையம், ஜூலை 14: மேட்டுப்பாளையம் ஸ்ரீ வனபத்திரகாளியம்மன் கோயில் அருகே உரிய பாதுகாப்பில்லாததால் பவானி ஆற்றில் மூழ்கி பக்தர்கள் அடிக்கடி உயிரிழக்கின்றனர்.
÷தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நெல்லித்துறையில் பவானி ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவனபத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். ஆடிக்குண்டம் போன்ற திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகே ஓடும் பவானி ஆற்றில் அடிக்கடி மூழ்கி பலியாவது தொடர்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
சுண்டி இழுக்கும் சுழல்கள்: இந்த ஆற்றுப் படித்துறையின் மேற்குப் பகுதியில் ஒரு பாறை உள்ளது. இதனைச் சுற்றி அதிக சுழல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு நீந்திச் சென்று அதன் மேல் உட்கார வேண்டும் என்ற ஆர்வத்தில் செல்வோர் சுழல்களில் சிக்கிப் பலியாகின்றனர். எச்சரிக்கை அறிவிப்புப் பலகை சிறிய அளவில் கரையோரத்தில் நிற்கிறது. இதனை யாரும் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலும் இளைஞர்களே இங்கு பலியாகின்றனர்.
÷பலியாவது இயற்கையா செயற்கையா: அடிக்கடி பக்தர்கள் இறப்பது இயற்கையல்ல, செயற்கையானது என்ற ஐயப்பாடும் நீண்ட காலமாக இங்கு நிலவுகிறது. ஆற்றில் மூழ்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் காலைப் பிடித்து இழுத்துச் சென்று பாறை இடுக்குகளில் சிலர் சிக்க வைக்கின்றனர். உடலை எடுப்பதற்காக பேரம் பேசி பெரும் பணத்தைக் கறக்கவே இவ்வாறு செய்வதாகவும் கூறப்படுகிறது.
÷பாதுகாப்பற்ற ஆற்றங்கரை:ஆற்றின் ஓரத்தில் படித்துறை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விடும்போதோ அல்லது மழையினால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதோ தண்ணீர் படித்துறையைத் தொட்டுச் செல்லும். அதனால் இங்கு புதிய படித்துறை கட்ட வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். ஆண்கள்,பெண்கள் தனித்தனியாகக் குளிப்பதற்கும் போதிய வசதி இல்லை. பெண்கள் உடை மாற்றவும் பாதுகாப்பான அறையில்லாதால் மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது.
தடுப்புக்கம்பி வேலிப் பணி: உயிரிழப்புகளைத் தடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.63 லட்சத்தில் கரையோரத்தில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு படித்துறை கட்டப்படும் என அறநிலையத்துறை அறிவித்தது. அஸ்திவாரம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது வேலை மந்தமாக நடக்கிறது. இதனை விரைவாக்கினால்தான் பக்தர்களுக்குப் பயன்படும். அப்போது, பக்தர்கள் ஆற்றில் இறங்குவதைக் கட்டுப்படுத்தவும் முடியும். தடுப்பு வேலி இருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பது போலீஸ் கருத்து.
குடிமகன்களின் ஆதிக்கம்:ஆற்றின் ஓரத்தில் யாரும் மது அருந்தக்கூடாது என போலீஸôர் விதித்த தடை காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது. பெரிய பாலம் அருகிலும், மின்கம்பி டவர்கள் அடியிலும், இடுகாட்டு ஓரத்திலும், தேக்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள நீரேற்று நிலைய வளாகத்திலும் மதுபாட்டில்களுடன் குடிமகன்களின் ஆதிக்கம் தொடர்கிறது. இதனை போலீஸôர் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியது:
தொடர்ச்சியாக பக்தர்கள் ஆற்றில் மூழ்கி பலியாவதை அறநிலையத்துறை அலட்சியப்படுத்தக் கூடாது. குடித்து விட்டு ஆற்றில் குளிப்பதால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனக் கூறித் தப்பிக்கவும் கூடாது. பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். ஆற்றில் பெண்கள், ஆண்கள் குளிப்பதற்கு தனித் தனி பகுதிகளை ஏற்படுத்த வேண்டும். தடுப்பு வேலி அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அதனைத் தாண்டி சென்று யாரும் குளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆற்றின் கரையில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.
கோயிலருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும். பக்தர்களிடம் குத்தகைதாரர்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்.
÷இது தொடர்பாக கோயில் துணை ஆணையர் குமரேசன் கூறியது: ஆற்றில் எச்சரிக்கைப் பலகை உள்ளது. திருவிழாவின் போது கூடுதலாக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும். போலீஸôரின் உதவியுடன் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பு வேலி அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
÷இக்கோயிலில் தற்போது ஆடிக்குண்டம் திருவிழா துவங்கியுள்ளது. இதற்கென லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, பவானி ஆற்றில் உயிரிழப்புகள் நிகழாதவாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் அவசியம்.