ஈரோடு, பிப். 10: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.398 கோடியில் புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாநகர் மற்றும் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர் 3-ம் நிலை நகராட்சிகள், பிராமண பெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம்பாளையம் ஆகிய 12 உள்ளாட்சி அமைப்புகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை எண். 4-ல் இருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் நபர் ஒன்றுக்கு 135 லிட்டம் வீதம் குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் இத்திட்டத்துக்கான மதிப்பீடு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இத்திட்டத்துக்கு ரூ.398.37 கோடி ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தினமும் 160 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்க நீர் பயன்பாட்டுக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான குழாய்கள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமையிடமும், பவானி, காளிங்கராயன் வாய்க்கால் வழியாக குழாய் அமைக்க பொதுப்பணித்துறை தலைமையிடமும் அனுமதி கேட்டு நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
2042-ம் ஆண்டு வரை ஈரோடு மாநகராட்சியில் பற்றாக்குறையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கான அனுமதியை விரைவில் முதல்வர் ஜெயலலிதா அளித்து, திட்டத்தை தொடங்கிவைப்பார் என்றும் ஈரோடு மேயர் பி.மல்லிகா பரமசிவம் தெரிவித்துள்ளார்.