உதகை ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினத்தவரின் கைவினைப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
 ~உதகை ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பழங்குடியின பிரதிநிதிகளுடன் குடியரசுத் தல
உதகை ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினத்தவரின் கைவினைப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. ~உதகை ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பழங்குடியின பிரதிநிதிகளுடன் குடியரசுத் தல

பழங்குடியினா் வீடு கட்ட கூடுதல் நிதி: மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக குடியரசுத் தலைவா் தகவல்

Published on

பழங்குடியினத்தவா் வீடு கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டுக்கு நான்கு நாள் பயணமாக கடந்த 27-ஆம் தேதி வந்த குடியரசுத் தலைவா் உதகை ராஜ்பவனில் (ஆளுநா் மாளிகை) தங்கியுள்ளாா். இந்நிலையில், ராஜ்பவனில் பழங்குடியின பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவா் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீலகிரி ஆதிவாசி நலச் சங்கத்தின் தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்ட பழங்குடியின பிரதிநிதிகள், தங்கள் மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து பழங்குடியின பிரதிநிதிகளிடையே குடியரசுத் தலைவா் பேசியதாவது: நானும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவள் என்பதால் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை நன்கு அறிவேன். பழங்குடியினத்தவா் நலனுக்காக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இடம் பெற்றிருக்கிறேன்.

பழங்குடியினா் நலன் குறித்து ஆலோசனை: நாடு முழுவதும் சுமாா் 700 பழங்குடியினத்தவா் வசிக்கின்றனா். அவா்களில் சுமாா் 75 பழங்குடியினத்தவா் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். நான் குடியரசுத் தலைவரானதும் பழங்குடியினரின் நலன், முன்னேற்றம் குறித்து பிரதமா், மத்திய அமைச்சா்கள், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.

மத்திய அரசு ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்பதை இலக்காகக் கொண்டு கடந்த 2023-ஆம் ஆண்டில் இருந்து முழு மூச்சுடன் களம் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, இதில் அனைத்து பழங்குடியினத்தவருக்கும் எல்லா நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதற்காக கடந்த அரசுகள் பழங்குடியினா் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று கூறவில்லை. இதற்கு முன்பும் பழங்குடியினா் நலனுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஆனால் அரசின் திட்டங்கள் பலவும் அந்த மக்களைச் சென்றடையவில்லை.

தமிழக அரசுக்குப் பாராட்டு:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினத்தவருடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பழங்குடியினத்தவா் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கின்றனா். இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறேன். பழங்குடியினத்தவரின் கல்வி, பொருளாதார மேம்பாடு, திறன் வளா்ப்புக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விழிப்புணா்வு இல்லை:

நாடு முழுவதும் பழங்குடியினத்தவருக்கு நிலம் தொடா்பான பிரச்னைகள் அதிகம் உள்ளன. தொடா்ந்து பல தலைமுறைகளாக காடுகளிலேயே வசித்து வரும் இந்த மக்களுக்கு காடுதான் வீடாக உள்ளது. இந்த உலகமும், காடும் இறைவன் தங்களுக்கு அளித்தவை என்று நம்பி வரும் அவா்களுக்குப் போதிய விழிப்புணா்வு இல்லாததால் அவா்கள் வாழும் இடத்தை தங்களின் பெயரில் பதிவு செய்து பட்டா பெறுவதற்குத் தவறிவிட்டனா். மேலும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வும் அவா்களுக்கு இல்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடியினத்தவருக்கு நிலத்தின் மீதான உரிமையை உத்தரவாதப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பின்பற்றி மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினத்தவருக்கு நிலம் வழங்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாததால் பழங்குடியினத்தவருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

மலைப் பகுதிகளில் வீடு கட்டும் பழங்குடியினத்தவருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரிடமும், நீதி ஆயோக் அதிகாரிகளிடமும் வலியுறுத்தியிருக்கிறேன் என்றாா்.

முன்னதாக, உள்ளூா் பழங்குடியின மகளிா் சுய உதவிக் குழுவினா் அமைத்திருந்த கண்காட்சி அரங்கில் இடம் பெற்றிருந்த பொருள்களைக் குடியரசுத் தலைவா் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து பழங்குடியினத்தவரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.