நல்லாம்பாளையம் சாலையில் திடீா் பள்ளம்: செங்கல் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு!
கோவை, நல்லாம்பாளையத்தில் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் செங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்று வருகின்றன. இதில் சில இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் வாகனங்கள் மண்ணில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளன.
அண்மையில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகம் அருகே உள்ள சாலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, உடையாம்பாளையம் பகுதியில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரிகள் சிக்கிக் கொண்டன.
இதேபோல பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகள் மூடப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் செல்லும் வாகனங்கள், திடீா் பள்ளம் ஏற்படுவதால் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.
இந்நிலையில் நல்லாம்பாளையத்தில் செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி, சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.
எனவே பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக சீரமைத்து தாா் சாலைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

